Wednesday, August 28, 2019

காலம் அறிதல்


காலம் அறிதல்


விலைமதிக்க முடியாத பொருள்;
ஒருமுறை தொலைத்தால் திருப்பிக் கிடைக்காத பொருள்;
யாருக்காகவும் காத்து நிற்காத பொருள்;
அது தான் காலம். இதை உலகமக்கள் அனைவரும் ஒப்பவே உணர்ந்து இருக்கின்றனர். 

காலம் பொன் போன்றது; என்ற பழமொழி தமிழில் வழங்குவது. ஆங்கிலத்திலும் காலத்தின் மகிமை போற்றும் பழமொழி உண்டு. 
Time And Tide Wait For No Man 

உதவி செய்யும்போது கூட வள்ளுவர் காலமறிந்து தான் செய்ய வேண்டும் என்கிறார். " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது" என்ற குறள் காலம் செய்யும் மாயம் 
பற்றிப் பேசுகிறது. சிறிய உதவியை உலகைக் காட்டிலும் பெரிதாக்குவது தக்க  காலம். 'காலமறிதல்' என்று ஒரு தனி அதிகாரமும் வகுத்துள்ளார் வள்ளுவர்.. அவரது காலத்தில் தகுந்த காலம் பற்றிய அறிவுரை அரசர்களுக்குத் தேவைப்பட்டது. ஆம்; அவர் பொருட்பாலின் அரசியல் பற்றிய பகுதியில் தான் காலமறிதல் பற்றிப் பேசுகிறார். 
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என்கிறார். 
பகற்பொழுதாக இருந்தால் காக்கை கூகையை வென்றுவிடும் அது காக்கைக்கு உகந்த காலம். கூகைக்குக் காலையில் கண் தெரியாது. அதுபோல் பகைவெல்ல நினைக்கும்  மன்னன் காலமறிந்து செயல்பட வேண்டும் என்பது அவரது அறிவுரை.  

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை’ காத்திருக்கும் கொக்கு தகுந்த காலம் கருதியே காத்திருக்கும். அஃறிணை உயிர்களே தகுந்த காலத்திற்காகக் காத்திருக்கும் போது ஆறறிவு கொண்ட மனிதன் காலம்கருத வேண்டாமா என்ன?!

இன்றைய அவசர உலகில்;
ஒரு கிராமமாகி விட்ட உலகில்;
போட்டி நிறைந்த உலகில்;
காலமறிந்து கடமையாற்ற வேண்டியவர் அரசு அதிகாரத்தில் இருப்பவர் மட்டுமல்ல. சிறுவர் முதல் முதியோர் வரை சரியான நேரத்தைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 
சரியான நேரத்திற்குள் பள்ளிப்பேருந்தைப் பிடிக்க வேண்டும்; இல்லையெனில் பிள்ளைக்கும் சிரமம்; பெற்றோர்க்கும் சிரமம். 
சரியான நேரத்திற்குள் சென்று அலுவலக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்; இல்லையேல் மேலாண்மையாளரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். 
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தனியார் பேருந்தில் அமர இடம் கிடைக்கும்; இல்லையேல் நின்று கொண்டே பயணிக்க வேண்டும். 
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தொடர்வண்டியில் ஜன்னலோர இருக்கை கிடைக்கும்; இல்லையேல் பயணம் முழுமையும் பச்சைபூமியும், நீலவானமும் பார்த்து ரசிக்க இயலாது.     

அதிகாலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நமது அன்றாடச் செயல்களும் கூட உரிய காலத்தில் செய்ய வேண்டியவேயே. 

எட்டு எட்டாக அடிவைத்து முன்னேறும் ஒவ்வொருவரும் எந்த எட்டில் என்ன செய்ய வேண்டுமோ; அதைக் காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும். 

சராசரி மனிதனும்;
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாமானியனும்;
தேடிச் சோறு நிதம் தின்று; பல சின்னஞ்சிறு கதைகள் பேசி; நரைகூடிக் 
கிழப்பருவம் எய்தினும்; ஓடி உயர நினைக்கும் மனிதக்கூட்டத்தின் கூறானவனும் காலம் கருதியே செயல்பட வேண்டும். 

உண்ணும் போதும்;
உடுத்தும் போதும்;
இயற்கையின் புதிர்களை அவிழ்க்கும் போதும்;
இன்பம் எங்கே எங்கே என்று தேடும் போதும்;
தேடிக் கிடைத்த இன்பத்தை அனுபவிக்கும் போதும் காலம் கருதியே செயலாற்றுவது அவசியம். 

இன்று காலம் அறியாமல் வாழ்ந்தால் இளமை இனிமையாகத் தோன்றும்; ஆனால் முதுமை கசக்கும் . எனவே 

காலமறிந்து செயல்படுவோம்; வெற்றியை நோக்கி முன்னேறுவோம்

Tuesday, August 27, 2019

வியப்புக்குறிக்குச் சொந்தக்காரர்

வியப்புக்குறிக்குச் சொந்தக்காரர் 

இன்று ஜூலை 15...கல்வித் திருநாள் .
பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள்.
என் பிள்ளைமைப் பருவத்தில் .... 
அன்று நான் படித்த பள்ளியில் ஆண்டு விழா.
முத்து வெள்ளையும் ரோஸ் பவுடரும் கலந்து கிலிசெரின் உடன்சேர்த்து முகமெல்லாம் பூசிவிட்டு; கண்மைப்பூச்சு ,உதட்டுச் சாயம் எல்லாம் தடவிவிட்டு ஆசிரியர் சென்றுவிட்டார். "யாரும் வெளியே வரக்கூடாது."  இந்த ஆணையை மீற அந்தக்காலம் எங்களில் யாருக்கும் துணிவு கிடையாது.
பூட்டிய கதவுகளுக்குள்  இருந்துகொண்டே தான் எங்கள்  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம். கிரீன் ரூமின் ஜன்னல் வழியாக விழா மைதானத்தைப் பார்த்தோம். அந்தக் கருத்த மனிதருடன் ஒரே ஒரு காக்கிச்சட்டை; கையில் கோலுடன். பக்கத்தில் பள்ளிப் பெரிய டீச்சர் ,நிர்வாக உறுப்பினர்கள் மூன்று பேர். புதிதாகக் கட்டிய விடுதியைப் பார்வையிட்டு வரும் அவர்களுக்குப் பின்னால் ....
கறுப்புப் பூனைப் படையோ ;போலீஸ் பாதுகாப்போ எதுவுமில்லை.
மலர்க்  கிரீடம் இல்லை 
மேடை அலங்காரம் இல்லை 
கட்  அவுட் தட்டிகள் எதுவும் இல்லை.
பறக்கும் பலூனில் பெயர் போடவில்லை
அலங்கார வளைவு ஒன்று கூடக் காணவில்லை.
நடக்கும் பாதையில் பூமெத்தையும் போடவில்லை . 
 பாதையில் வண்டி வாகனம் எதுவும் தடுக்கப்படவில்லை . 
வெள்ளைக்கார்களை வேண்டிக்கேட்டு சாரிசரியாய்  முன்னும் பின்னும் ஓடவிட்டுச் சாதிக்கவும் இல்லை.

பாதுகாப்பு கேட்டு ஸ்டண்ட் செய்யாத அரசியல்வாதி 
பதவி ஏற்றவுடன் ஃ பாரின் மருத்துவமனைக்குப் பறக்காதவர்
இருண்டு  கிடந்த கிராமங்களில் எல்லாம் ஒளி விளக்கு ஏற்றியவர்.
உள்ளக்கோட்டம் அற்ற உண்மைத் தலைவர்.
தன்னலம் பேணாத தருமத்தின் காவலர் 
கண்ணியம் மாறாத கடமை வீரர்   
காந்திவழி நின்ற கதராடை மனிதர் 
மதிய உணவு என்னும் மகத்தான திட்டத்தை மாணவர் உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
ஓராசிரியர் பள்ளியேனும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒருங்கு திறந்து வைத்தவர்
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இளைய சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்று பள்ளிச்சீருடைத்  திட்டத்தைக் கொண்டு வந்த செயல்வீரர். 

இவர் இருந்தபோதும் சரி; இறந்த போதும் சரி; இவர் குடும்பத்தில் சொத்துச் சண்டையே  இல்லை. ஏனென்றால் பினாமியே இல்லை.
இப்படி ஒரு தலைவர் இருந்தார் என்று சொன்னால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் யாரும் நம்புவார்களா?ஐயம்  தான்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. ஆனால் எல்லாப் பள்ளிகளும் பாடம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. விடுமுறை விட்டால் தான் கொண்டாட்டமென்ற நிலை மாறி வகுப்பு நடத்திக் கொண்டாடுகின்றனர். வரவேற்கத் தகுந்த மனமாற்றம்.

நீங்கள்  பிறந்த வீடும் சரி; அந்தத் தெருவும் சரி; இன்றும் என்றும் அமைதியில் மூழ்கித்தான் மூச்சடக்கி இருக்கிறது.

ஆண்டுவிழா மேடையில் நீங்கள்  அமர்ந்த அந்த ராஜா சேர் ;அதற்கு நீல நிறத்தில் ஒரு சட்டை தைத்து கைகள், சாய்மானம், இருக்கை  எல்லாம் மூடித்தான் பக்குவமாக வைத்து இருந்தார் தையல் டீச்சர். எங்கள் குழந்தைப்பருவத்து ஆசை ....ஆசிரியர் பார்க்காத நேரத்தில் ஒரு நொடி அந்த சேரில் அமர்ந்து  எழுந்து பெரிய்ய்ய்ய சாதனை புரிந்த மகிழ்ச்சியில் பூரித்து மகிழ்ந்தோம்.
  
(கல்வித்திருநாளன்று மாணவர்க்கு முன் ஆற்றிய வழிபாட்டுரை)