அவையோருக்குவணக்கம்
பூமியில் உயிர்கள் கோடானுகோடி வகையினவாய் உள்ளன. அவற்றுள் ஆறாம்
அறிவைப் பெற்றவன் மனிதன்.
இந்த அறிவால் நிலவை அடைந்தான்.
கிரகங்களை ஆராய்கிறான்.
ஆழ்கடலின் தரை தொட்டு அதிசயங்கள் தேடுகிறான்.
திசைகளை அளந்து திக்கெட்டும் பறக்கிறான்.
உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டான்.
இத்தகு அறிவைப் பெற்றதால் மனிதன் எல்லாம் பெற்றவன் ஆகிவிட்டானா?
கொக்கி போட்டுப் பதிலை இழுத்துப் பார்ப்போம்.
என்னிடத்தில் இல்லாத பொருளே இல்லை என்று எண்ண இயல்பவன் எவனோ;
அவனே எல்லாம் உடையவன்.
தன் தேவைகள் அனைத்தும் நிறையப் பெற்று மனதில் திருப்தி கொள்பவனே
எல்லாம் உடையவன்.
இல்லை என்ற ஏழ்மை இல்லாத பெருமனம் எவனிடம் உள்ளதோ; அவனே
எல்லாம் உடையவன்.
சரித்திரப் பாடத்தின் சாரமெல்லாம் சத்தோடு புரிந்து கொள்வது முற்றிய அறிவா?
பூகோளத்தில் பூட்டிக்கிடக்கும் உண்மைகளைத் திறப்பது பூர்ண அறிவா?
அறிவியல் அளிக்கும் ஆழ்ந்த உண்மைகள் தான் அப்பட்டமான அறிவா?
கணிதச் சிக்கல்களைச் சீராக விடுவித்துக் காண்போர் வியக்கும் வண்ணம் மேன்மை
பெறுவதை கச்சிதமான அறிவு என்று சொல்லலாமா?
இலக்கியங்கள் எல்லாம் பயின்று இன்பவுலகில் உன்னதங்களை உன்னிப்பாகப் புரிந்து
கொள்வது உண்மை அறிவா?
இப்படி எத்தனையோ துறைகள் நாளுக்குநாள் பெருகிப் பல்கிப் புதுமைகள்
படைக்கின்றன. இவற்றுள் எந்த அறிவு எல்லாம் உடையவராக நம்மை மாற்றும்?
பெயருக்குப் பின்னால் பல பட்டங்களை நீட்டிப் படித்தவன் ஆனவுடன் ‘எல்லாம்
நம்மிடம் இருக்கிறது’ என்ற திருப்தி ஏற்படுகிறதா? ………………இல்லை.
அணுவைத் துளைத்தாலும் ஆண்டவனை அறிந்து கொள்பவன் தான் மனதில்
நிறைவைக் காண்பான்.
உயர உயரப் பறந்தாலும் அயராத உழைப்புக்கு ஆண்டவனே துணை என்று
அறிந்தவன் மனதில்தான் திருப்தி ஏற்படுகிறது.
மாளிகை வாசமும், மதிமயக்கும் இன்பமும் நிலையற்ற நிறைவையே அளிக்கும்
என்ற அனுபவ மெய்யறிவு யாரிடம் உள்ளதோ அவரே எல்லாம் உடையவராகக்
காணப்படுகிறார்.
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கிய நாயன்மார் ‘எல்லாம் உடையவரா’கத்
தான் தம்மை எண்ணினார். மக்களும் அவரை எல்லாம் உடையவராகவே
மதித்தனர்.
ஆகவே அறிவு என்பது; கலை அறிவோ; கல்வி அறிவோ; அறிவியல் அறிவோ;
இலக்கிய அறிவோ; வாழ்க்கை அனுபவ அறிவோ அன்று. அது இறையுணர்வு
உடைய மெய்யறிவு ஆகும்.
மெய்யறிவுடையார் எல்லாம் உடையார் எனல் தகும்.
நன்றி
வணக்கம்