காலம் அறிதல்
விலைமதிக்க முடியாத பொருள்;
ஒருமுறை தொலைத்தால் திருப்பிக் கிடைக்காத பொருள்;
யாருக்காகவும் காத்து நிற்காத பொருள்;
அது தான் காலம். இதை உலகமக்கள் அனைவரும் ஒப்பவே உணர்ந்து இருக்கின்றனர்.
காலம் பொன் போன்றது; என்ற பழமொழி தமிழில் வழங்குவது. ஆங்கிலத்திலும் காலத்தின் மகிமை போற்றும் பழமொழி உண்டு.
Time And Tide Wait For No Man
உதவி செய்யும்போது கூட வள்ளுவர் காலமறிந்து தான் செய்ய வேண்டும் என்கிறார். " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" என்ற குறள் காலம் செய்யும் மாயம்
பற்றிப் பேசுகிறது. சிறிய உதவியை உலகைக் காட்டிலும் பெரிதாக்குவது தக்க காலம். 'காலமறிதல்' என்று ஒரு தனி அதிகாரமும் வகுத்துள்ளார் வள்ளுவர்.. அவரது காலத்தில் தகுந்த காலம் பற்றிய அறிவுரை அரசர்களுக்குத் தேவைப்பட்டது. ஆம்; அவர் பொருட்பாலின் அரசியல் பற்றிய பகுதியில் தான் காலமறிதல் பற்றிப் பேசுகிறார்.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என்கிறார்.
பகற்பொழுதாக இருந்தால் காக்கை கூகையை வென்றுவிடும் அது காக்கைக்கு உகந்த காலம். கூகைக்குக் காலையில் கண் தெரியாது. அதுபோல் பகைவெல்ல நினைக்கும் மன்னன் காலமறிந்து செயல்பட வேண்டும் என்பது அவரது அறிவுரை.
‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை’ காத்திருக்கும் கொக்கு தகுந்த காலம் கருதியே காத்திருக்கும். அஃறிணை உயிர்களே தகுந்த காலத்திற்காகக் காத்திருக்கும் போது ஆறறிவு கொண்ட மனிதன் காலம்கருத வேண்டாமா என்ன?!
இன்றைய அவசர உலகில்;
ஒரு கிராமமாகி விட்ட உலகில்;
போட்டி நிறைந்த உலகில்;
காலமறிந்து கடமையாற்ற வேண்டியவர் அரசு அதிகாரத்தில் இருப்பவர் மட்டுமல்ல. சிறுவர் முதல் முதியோர் வரை சரியான நேரத்தைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
சரியான நேரத்திற்குள் பள்ளிப்பேருந்தைப் பிடிக்க வேண்டும்; இல்லையெனில் பிள்ளைக்கும் சிரமம்; பெற்றோர்க்கும் சிரமம்.
சரியான நேரத்திற்குள் சென்று அலுவலக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்; இல்லையேல் மேலாண்மையாளரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தனியார் பேருந்தில் அமர இடம் கிடைக்கும்; இல்லையேல் நின்று கொண்டே பயணிக்க வேண்டும்.
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தொடர்வண்டியில் ஜன்னலோர இருக்கை கிடைக்கும்; இல்லையேல் பயணம் முழுமையும் பச்சைபூமியும், நீலவானமும் பார்த்து ரசிக்க இயலாது.
அதிகாலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நமது அன்றாடச் செயல்களும் கூட உரிய காலத்தில் செய்ய வேண்டியவேயே.
எட்டு எட்டாக அடிவைத்து முன்னேறும் ஒவ்வொருவரும் எந்த எட்டில் என்ன செய்ய வேண்டுமோ; அதைக் காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
சராசரி மனிதனும்;
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாமானியனும்;
தேடிச் சோறு நிதம் தின்று; பல சின்னஞ்சிறு கதைகள் பேசி; நரைகூடிக்
கிழப்பருவம் எய்தினும்; ஓடி உயர நினைக்கும் மனிதக்கூட்டத்தின் கூறானவனும் காலம் கருதியே செயல்பட வேண்டும்.
உண்ணும் போதும்;
உடுத்தும் போதும்;
இயற்கையின் புதிர்களை அவிழ்க்கும் போதும்;
இன்பம் எங்கே எங்கே என்று தேடும் போதும்;
தேடிக் கிடைத்த இன்பத்தை அனுபவிக்கும் போதும் காலம் கருதியே செயலாற்றுவது அவசியம்.
இன்று காலம் அறியாமல் வாழ்ந்தால் இளமை இனிமையாகத் தோன்றும்; ஆனால் முதுமை கசக்கும் . எனவே
காலமறிந்து செயல்படுவோம்; வெற்றியை நோக்கி முன்னேறுவோம்
No comments:
Post a Comment