காளி வாழ்த்து
காளியம்மா காளியம்மா - திரிசூலியம்மா நீலியம்மா
காளியம்மா காளியம்மா - வீரசாலியம்மா மாரியம்மா
உயிர் காக்க வந்தவளே - காளியம்மா எங்கள்
உடைமையெல்லாம் காப்பவளே -காளியம்மா
பெருவழியின் செல்வமெல்லாம் - காளியம்மா எங்கள்
பெருமைக்குச் சேர்த்திடம்மா- காளியம்மா
கருணைக்கு ஒரு தெய்வம் காளியம்மா
பெருமைக்கு உரியவளே காளியம்மா
பாடி வந்தோம்; தேடிவந்தோம்; பாமாலை சூட்ட வந்தோம் அம்மா
- காளியம்மா
மறமாந்தர் எங்கள் தெய்வம் காளியம்மா- என்றும்
மனம்சோரா வாழ்வினைத்தா காளியம்மா
திறமாந்தர் நாங்கள் வந்தோம் காளியம்மா- உந்தன்
திருவருளைத் தாருமம்மா காளியம்மா
-கருணைக்கு
விழிகளைத் திறந்து விதிசமைக்க வேண்டும்
பாரத தேசத்தைப் பஞ்சதேசம் ஆக்கி
பாஞ்சாலி பட்டதுயர் கொஞ்சமெனப் போக்கி
ஓராமல் செயலாற்றும் ஓட்டு முதலைகள்
தீராத தலைவலியாய் நிலைத்துவிட்ட கறைகள்
கண்துடைப்பு வித்தைகள் காட்டுவதில் சூரர்
பண்மொழியால் வாக்குறுதி வீசுவதில் வீரர்
நாற்காலி கிடைத்தவுடன் மறதியிலே மன்னர்
தோற்காமல் ஜெயித்திடுவர் தேர்தல் விற்பன்னர்
மாறா மனம்கொண்ட ராமனும் அன்று
மலரவைத் தானொரு குறையிலா ராஜ்யம்
தேரா மன்னராய் அரசியல் வாதிகள்
தெரிவு செய்ததோ நிறையிலா ராஜ்யம
காராக்கிருகத்தில் அவதரித்த கண்ணன்
கம்சனை வதைத்து நாட்டினான் அறம்
கலியுகம் தழைக்க வழிபிறக்க வில்லை
துயிலேற்று உறைகிறான் தூயவன் இன்னும்
பாம்பணையும் பாற்கடலும் புராணத்துச் சின்னம்
தேம்பாவால் போற்றிவிட்டோம் பலனுண்டோ இன்னும் ?
மாபாதக அரசியலை சீர்திருத்த வேண்டும் ;
விழிகளைத் திறந்து விதிசமைக்க வேண்டும் .
தந்தைமை
எத்தனை காலங்கள் ஐயா! உங்கள் நினைவு நாளில் ............
என்னைச் சுமப்பதே சுகம் என்று நீங்கள் தூக்கித் திரிந்த காலம்
உங்கள் தோளில் நாடியைப் பதித்துக் கொண்டு உலகைச் சுற்றிப்பார்த்த காலம்
இரண்டு கைகளிலும் இரண்டு மிட்டாய்கள் கொடுத்துத் திண்ணையில்
இறக்கிவிட்ட காலம்
முதன்முதலாய்த் தெருப்புழுதியில் கால்பதித்த போது உங்கள் சுண்டுவிரலைப்
பிடித்த காலம்
எனக்குப் பிடித்த குலாப்ஜாமூன் வாங்கிக்கொடுத்து குஷியாக்கிய காலம்
வணிகப்பயணம் மேற்கொள்ளும் முன்னர் அண்டன்பேக்கரி வரை
உடனழைத்துச் சென்ற காலம்
கைநிறையப் பொட்டலங்கள் கொடுத்து டாடா காட்டிய காலம்
அம்மாவுக்குப் பயந்து உங்களிடம் ரகசியமாய்ப் பேனா வாங்கிய காலம்
'எம்பொண்ணுக்குப் படிப்பெல்லாம் தேவையில்லை' என்று கொடிபிடித்த காலம்
சென்ற தீபாவளிக்கு எடுத்த அதே கலர்; அதே டிசைன்; அதே ரகதாவணியை இந்த
தீபாவளிக்கும் கொடுத்த காலம்
பள்ளியில் எனக்குப் பரிசாகக் கிடைத்த 'பாரதியார் கவிதைகள்' புத்தகத்தைக்
கடைத்தெரு முழுதும் காட்டித் திரிந்த காலம்
சொந்தக்காலில் நான்நிற்க நீங்கள் தவித்த காலம்
'மாப்பிள்ளைக்குத் தலைக்கறி தாண்டா பிடிக்குமாம்; சமைத்துப் பழகிக்கொள்'
என்று வற்புறுத்திய காலம்
கைப்பிடித்துக் கொடுத்தவேளை மருண்டகோலம்; 'சம்பளத்த முழுசா மாமியார்
கையில குடுத்துருப்பா' என்று பதறிய காலம்
என்னிடம் வாங்குவது மானக்கேடு என்று ஒதுங்கிய காலம்
நான் வெய்யிலில் வாடாதபடி; 'ஐயா அலைஞ்சி வாங்கிட்டு வந்துர்ரேண்டா; நீ
வீட்டுக்குப் போடா' என்று என்னைப் பொத்திய காலம்
'மாங்காய் போட்டு மீன்குழம்பு; எங்கம்மா சமைத்த மாதிரியே வச்சிருக்க' என்று
ருசித்த காலம்
'கண்ணா'... என்று வாய்நிறைய அழைத்து; அந்தக்குரலில் அன்பையும்,
நம்பிக்கையையும் வெளிப்படுத்திய காலம்
இன்று என்கையைப் பற்றிக்கொண்டு எத்தனையோ சொந்தங்கள்;
எனக்குப் பிடித்துக்கொள்ள தந்தையின் சுண்டுவிரல்.......?
கற்பனை ஊற்றுக்கண்ணின் அடைப்பு ----------ச்சி
அறியாப் பருவத்தில் பாட்டிகள் சூட்டிய பட்டம்
அறிந்தபின்னரோ அண்ணன்தம்பிகள் தட்டிய மட்டம்
நாற்றாய் நடப்பட்டபின் நாயகரின் அரட்டல்
நாற்காலி வீற்றிருக்கும் தலைமுறையின் மிரட்டல்
அஞ்சுமனம் மாறி மிஞ்சுநரை எய்திவிட்டால்- அதுவரை
கொஞ்சிநின்ற பாலகரின் மீசைமுறுக்கும் உருட்டல்
கிழடுகட்டை திட்டுஒன்றே வயோதிகம் வந்து கிட்டல்
இடைஞ்சல்பிறவிகள் இவரென்று முகம்திருப்பும் முட்டல்
வாரிசாய் வந்துசேரும் வளைக்கரத்தார் சுட்டல்
வேராயிருந்து உயிர்ப்பித்த விழுதுகளை வேண்டாமெனும் கட்டம்
கோரப் பார்வைதான் சமூகத்தின் சட்டம்
பொருந்தாத உறவுகளாய்ச் சதுரத்துக்குள் வட்டம்
திருந்தாத மனங்களுக்குச் சொல்வதென்ன திட்டம்!
பிஞ்சுப் பருவமுதல் இவரென்றும் சினம்தாங்கித் தவிக்கிறாரே ஏன்?
பஞ்சுமனமென்றும் ஆறாமல் பற்றி எரிவதும் ஏன்?
விஞ்சும் அன்பிற்கென்றும் வேதனையே பிரதியாவது ஏன்?
தஞ்சமெனச் சென்றுஎன்றும் சுமைதாங்கி ஆனாரே ஏன்?
முட்களாய்த் தைக்கும் கேள்விக்குறி முனைகள்
இதயச்சுவரில் ஏற்படுத்தும் இடைவிடாத ரணங்கள்
ராஜாங்கம் நடத்தவந்த ராணியர் சோர்ந்துபோய்
தாஜாங்கம் செய்துசெய்தே தான்தேய்ந்தார் வாழ்க்கையிலே
மகிழ்ச்சிப் பால்வீதியில் பந்தங்களுடன் பவனிவரத் துடித்தவர்
நிகழ்ச்சி மாறிவிட்டதில் - விழிகளைமட்டும் விண்மீன்களில் சிக்கவிட்டு
உறவுக்கும்பலுக்கு இடையிலும் தனியாகவே தவிக்கிறார்
பிரச்சினைச் சுழிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட படகானார்.
விடிவுக்கரை காணத் தீர்ப்பொன்று தீட்டுகிறார்!!
ஐஸ்பிரியாணி பேசுகிறது
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது. எதனால் இந்த திடீர் மாற்றம்? என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டனர்.
வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு இப்போது என் நினைவே இல்லாமல் போய் விட்டதே!? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.
வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
பச்சை வெங்காயத்தைக் கூட்டிப் பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
ஊறுகாயும், வடகமும், வத்தலும் என எத்தனை கூட்டாளிகள்... எளிமையின் சின்னங்கள். இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!
என்னோடு சேர்த்து வைத்துச் சுவைத்த பக்கஉணவுகள் ----அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே ---ஒரு ராஜபாளையம் சப்பட்டை ---தோல் சீவி துண்டு போட்டால் ---எங்கள் இணைக்கு ஈடு எது?
பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத் தகுதியான வேறு உணவு எது?
சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை. உரித்து விட்டு என்னோடு கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு; சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய் சோற்றுக்கு ஒருகடி.
சைவம் மட்டும் அல்ல; அசைவத்திற்கும் ....அசராமல் ஈடு கொடுத்தேன். ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்; அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்...பானை சோறும் காலி. இன்னும் வக்கணையாக வேண்டுமா...?; "மையூன் தெரிந்த நெய்"யில் வெடித்து வேகத் தொடங்கும் .....வெடிகறி இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி. என்னோடு போட்டி போட .....ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் .....இன்னும் என்னென்ன ....???
படைப்புத்தமிழ்- 6
நெம்புகோலாகும் நிஜங்கள்
வெற்றிக்கரை தேடும் ஆசைப் படகுகளே !
வாழ்க்கைக் கடலில் விசையாய்ப் பாயும்போது
ஏமாற்றப் புயல் வீசும்; இடைஞ்சல் பாறை தட்டும்;
உடையும்; உருக்குலையும்; துன்பஅலையும் தூக்கிஎறியும்
கரையில்லாக் கடலுண்டா? நதியுண்டா? நிலையுண்டா ?
படகுகள் கரையேறாமை கடலின் குற்றமா? கரையின் குற்றமா ?
முயன்றால் படகுகள் முழுதாய்க் கரையேற
நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு.
குறிக்கோள் வானில் குஞ்சுகளோடும் பிஞ்சுகளோடும்
கும்பலாய் அலையும் கூட்டுப் பறவைகளே!
திசைதெரிய வில்லையென்று மருண்டுநீர் சோர்ந்துவிட்டால்
அந்தரத்தில் ஆவிபோம் ஐயமில்லை சத்தியம்
திசைகள் இருப்பதோ திட்டமாய் நிச்சயம்
தெரியாத திண்டாட்டம் திசையின் குற்றமா? வானின் குற்றமா?
தவிக்கும் பறவைகள் தாமாய்க் கூடடைய
நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு
நீதிவேண்டிப் போட்ட வழக்குகள் கோடி
பாதிவழியில் பயணம் தடைப்பட்டு ஓடி
மீதிவாழ்க்கை கேள்விக் குறியாய் நாடி
நாதியின்றி மிரண்டிருக்கும்; விதியை நொந்து நலிந்து நிற்கும்
சட்டம் இருப்பது நம் கையில் ; திட்டம் இருப்பதும் நம் கையில்
தீர்ப்பின்றித் தள்ளுபடியானால் சட்டத்தின் குற்றமா? வழக்கின் குற்றமா?
இல்லாத தீர்ப்பை இனிமேல் எழுதிட
நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு
பயிற்சி இல்லாத கைகள் பூப்பறிக்கும் போது; முட்கள் தைப்பது இயற்கை
பயிற்சி இல்லாத கைகள் படகு வலிக்கும் போது; சுழலில் சிக்குவதும் இயற்கை
பயிற்சி இல்லாத சிறகுகள் பறக்கத் தொடங்கும் போது; தரையில் வீழ்வதும் இயற்கை
கடமைச் சுமையைத் தோளில் தூக்க ;நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு
ஒளித்துளிகளே;மின்மினிகளே
இருளைக் கிழித்து நின்று தனிமைப் படாதீர்கள்
ஓங்கார நாதம் போல் ஒன்றுபடுங்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சுருண்டு விழும் அலை போல
ஒளிவெள்ளம் பாய்ச்ச உங்களால் முடியும்
அந்த வெளிச்சத்தில் இருளின் திண்மை கரைந்துபோம்
தோளுயர்த்தி நில்லுங்கள்
வெற்றியின் எதிர்பதம் வேகமாய்ப் புறமுதுகிடும்
இன்பமும் துன்பமும் இறைவகுத்த நியதி
மலரும் முள்ளும் அழகினில் பாதி
உலவும் தென்றலைச் சித்திரை வேனிலில்
அனுபவிப்பது போல் சுகம் பெறுக
ஒளியும் இருளும் மாறி மாறி வரும் உலகம்
இயல்பென ஏற்று இருப்பது மனிதம்
ஒளியின் நிழலில் ஒதுங்கி நின்று
இருளில் விளக்கையேற்றி வாழ்க
நம்பிக்கை நம்பர் ஒன் நெம்புகோல்
நெம்புகோல் நம்பர் டூ நெஞ்சுறுதி
முயற்சி மூன்றாவது நெம்புகோல்
நாலாம் நெம்புகோல் நான் சொல்வேன்
தோல்வியில் துவளாச் சோர்வின்மை
வம்புகள் வாதங்கள் பேசுவதில் பலனில்லை
தெம்புடன் கையில் நெம்புகோல் எடுங்கள்
ஒளிமயமான எதிர் காலத்தைத்
தேடி ஓடும் வாழ்வு சுவைக்கும் .
என் தமிழ்
என் தமிழை யாராலும் கட்டிப்போட இயலாது .
ஏனென்றால்
அது என் மொழி-அதன் நோக்கம் எளிமை
என் தமிழைச் சிறை வைக்க இனியும் யாரும் பிறக்கவும் முடியாது
ஏனென்றால்
அது என் மொழி -அதன் முகவரியே தெளிவு.
என் தமிழுக்குத் தடை சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.
ஏனென்றால்
அது என் மொழி -அதன் மறுபெயரே உரிமை
என் தமிழ் என்றும் துள்ளிக் குதித்து துறுதுறுவென ஓடும்.
ஏனென்றால்
அது என் மொழி -அதற்கு என்றும் வளரிளம் பருவம் தான்.
என் தமிழ் தாறுமாறாக ஓடாமல் தழுவிச் செல்வது என் கையில்
ஏனென்றால்
அது என் மொழி - அதன் ஊட்டம் அனுபவமும் தேவையும்
என் தமிழைக் கச்சாப் பொருளாக்கி விதிகளை உற்பத்தி செய்யட்டும்.
ஏனென்றால்
அது என் மொழி -அதன் உயிர்ப்பு விடுதலை
முகத்துக்கு நேரே ஒரு விமர்சனம்
(1990களில் ஓர் ஆண்டு…எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றக்
கூட்டத்திற்கு வருகை தந்த கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு முன்னர் வாசித்த
கவிதை விமர்சனம்).
கூட்டத்திற்கு வருகை தந்த கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு முன்னர் வாசித்த
கவிதை விமர்சனம்).
பெற்ற பிள்ளைகளைப் பிறர் விமர்சனம் செய்யப்
பொறுமையோடு கேட்டுக் கொண்டிருக்கும் தாய்மைத் திருவுள்ளமே.
என்னிடம் வந்து; என் குழந்தைக்கு
முடி குட்டை, மூக்கு சப்பை என்று சொன்னால்
சொன்னவர் மூக்கு சப்பியே தீரும்
என் குழந்தையைப் புகழும் உரிமை தான்
எவர்க்கும் உண்டு
குறை கூறும் உரிமை
என் தாய்க்கும் கிடையாது.
உங்கள் கவிமழலைகளை
மற்றவர் அலசி ஆராய
பண்பு மேம்பாட்டுடன் கேட்டுக் கொண்டிருக்கும்
உங்கள் சகிப்புத்தன்மையை மெச்சுகிறோம்.
நாங்கள் பார்த்த; படித்த எல்லாக் கவிஞர்களும்
வீணையைத்தான் வீணாக வம்புக்கு இழுக்கிறார்கள்.
நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான கவிஞர் தான்!
பூமியைப் புரட்டவும் புல்லாங்குழலை நெம்புகோலாக்கச் சொல்கிறீர்கள்
உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்
நீங்கள் சிவகாசியோடு நெருக்கமான தொடர்புள்ளவர்
உணர்ச்சிப் பெருக்கிற்கும், உள்ளத்துக் கொந்தளிப்பிற்கும்
உவமைச் சிறப்பாக; உருவகப் பொருளாக
எங்கள் தீக்குச்சியை அடிக்கடி எடுத்தாள்கிறீர்கள்
எண்ணிக்கூடப் பார்த்திருக்க மாட்டார் எவரும்
தீக்குச்சியை வைத்துத் திருத்தமாகச் சொல்லி விட்டீர்
தனித்தன்மை இங்கு தலைதூக்குகிறது. ( பார்க்க- முகத்துக்கு முகம்-ப. -73)
உங்கள் கவிதைகளில் இடம் பெறும் காயங்கள்,
உங்கள் கற்பனையில் பிறப்பெடுக்கும் பாத்திரங்கள்;
உங்கள் ஊற்றுக்காலில் வடிவம் பெறும் படிமங்கள்.
பேச்சுக்காலில் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் தெருப்பாடகரே!
மன்னிக்கவும்...- திருப்பாடகரே என்று தான் சொல்ல நினைத்தேன்
பெரும்பாலும் நீங்கள் போற்றும் செல்லச்சொல் 'தெரு' தானே!
விரும்பாமலும் என் கவிப்பெருக்கில் விசையோடு இடம் பிடித்துவிட்டது
so……………...திருப்பாடகரே
வாழைமரம் வாசல்நாட்டி
தோரணத் தொங்கல் இட்டு
பூரண கும்பம் வைத்து
பூப்பந்தல் மேடைபோட்டு
சந்தனம், பன்னீர் தெளித்து
அதிர்சரம் நூறு வெடித்து
அசத்திவிட ஆசை எங்களுக்கு
எங்கள் மாணவச் செல்வங்கள் எல்லாம்
ஆயிரத்தைத் தாண்டும் பொற்கும்பங்கள் தானே.
இவர்களின் விழித்தோரணங்கள் தொங்கும்
இந்தப் பச்சை வேப்பஞ்சோலை
பாங்கான சிறுமேடை
உற்சாகம் வெடிக்கும் கூட்டம்
எல்லாம் எளிமையின் ஏற்றம்- உங்கள் கவிதையைப் போல
இது
இந்த மண்ணின் சிறப்பு
இங்குள்ளோர் போற்றும் சிறப்பு
எல்லோரும் ஏற்கும் சிறப்பு
இணையிலாப் புகழ்ச் சிறப்பு
இந்த எளிமைச் சிறப்பை இன்முகத்துடன் ஏற்று
கவிப் பேரமுதை வரையாது வழங்கும் சினிப்பாடகரே
எதிர்கால வானில் மேத்தா எனும் நட்சத்திரம்
கதிர்ஒளி வீசி வாழ்க; வளர்க என
சொல்லில் அடங்காத; எழுத்தில் அடங்காத;
மனதிலும் அடங்காத ஆர்வத்துடன் உரைக்கிறேன்.
ச.கண்மணி கணேசன
இராமாயணச் செண்டு
பாருக்குள் நல்ல காப்பியமாம் செண்டு
தேர்ந்து புனைவோம் கம்பனைக் கொண்டு
காவியக் கதையின் தலைவனாம் இராமன்
பாவியல் சோலையில் மகிழமலர் ஆவன்
ஒப்பற்ற சீதையாம் ஓவியப் பெண்ணாள்
தப்பாத கற்பாம் முல்லையின் சான்றாள்
இணைபிரியாத் தம்பி இலக்குவன் ஏற்றம்
மணம்பிரியா மல்லிகைப்பூவின் தோற்றம்
மாருதி மைந்தன் அனுமனின் பெருமை
தாரணி போற்றும் தாமரை அருமை
துணையென நிற்கும் தம்பியர் கூட்டம்
அணையென அமையும் பன்னீர்ப்பூ ஈட்டம்
பத்துத்தலை இராவணன் பணியாத மாட்சி
பாரினிலே இரவிமுன்னர் ஆம்பல்தரும் காட்சி
பாருக்குள் நல்ல காப்பியமாம் செண்டு
தேர்ந்து புனைவோம் கம்பனைக் கொண்டு.
வசப்பட்டது வாழ்க்கை
(எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் 2002ம் ஆண்டு கொண்டாடிய நிறுவனர் தின விழாவில்
வாசித்த கவிதாஞ்சலி.)
வாசித்த கவிதாஞ்சலி.)
கதை ஒன்று சொல்ல ஆசை - விடு
கதை போலச் சொல்ல ஆசை .
ஆலங்கிளி ஒன்று; ஆலம்பழம் தின்று
ஆகாசவீதியில் பறந்து திரிந்தது
போகிற போக்கில் கொட்டை போட்டது
போட்டதோ எச்சம் - கால
ஓட்டத்தில் விருட்சம்
விழுந்த இடத்தில் முளைத்தது வித்து
கொழுந்து இலைகளாய்த் துளிர்த்தது சித்து
வான்மழை வஞ்சித்தாலும்
வளம்தரும் சமூகம் நாளும்
வேலி கட்டிக் காவல் அமைத்து
கால்நடை கறிக்காமல் கண்ணில் காத்தது
நேசங்கள் வியர்வை நீரூற்றின
பாசங்கள் உழைப்பால் பேர் கூறின
இரவும் பகலும் போகும் வரும்
மழையும் வெயிலும் மாறும் தொடரும்
அசைவின்றி நிற்கும் அடிமரம் வைரம்
திசையெட்டும் கிளைத்துப் பரவும் விரியும்
காற்றின் வேகமோ கேட்டது ஈடு
கிளைகளின் பாரமோ தோற்றியது கேடு
இறங்கியது விழுது
நீங்கியது பழுது
தொடங்கியது பொழுது
அடங்கியது அசதி
பூத்துக் காயத்துக் குலுங்கும் கனிகள்
ஒய்யாரமாய் வண்ணம் காட்டி
உள்ளிருக்கும் புழு மறைக்கும்
அத்திப் பழங்கள் அல்ல; ஆலம் பழங்கள்
முற்றித் திரண்ட பழம் தேடித் தின்னும்
ஆலமரக் குருவிகள் 2327
அத்தனையும் இரட்டை வால் குருவிகள்
அவற்றைக்
கட்டிப் போட நினைத்துக் கட்டி அணைப்பர்
தட்டிக் கேட்ட பின்னும் தழுவிக் கொள்வர்
இட்ட முட்டையுடன் இணைந்த முட்டையையும்
ஷோக்காய் அடைகாத்துக் குஞ்சாக்கிக் கடன்முடிக்கும்
கீதக் குயில்களோ ஆலமரக் கிளைகளில் 125
தெய்வம் தம்தொழில் எனதினம் செய்யும் மைனாக்கள் 63
எல்லாம் நிர்வகிக்கும் எழில்மிகு மயில்கள் ஆங்காங்கு
பழம் தின்று கொட்டை போட்ட ஆலங்கிளிக்கு
அவசரக் கோலமாய் அமரலோக வாழ்க்கை - இங்கு
குருவிகட்கும் குயில்களுக்கும் மைனாக்களுக்கும் மயில்களுக்கும்
விஸ்வரூபமாய் விளைந்த ஆலமரத்தில் இவ்வுலக வாழ்க்கை
பழுத்து உதிரும் இலையும் உரமாகும்
எண்ணும் எழுத்தும் உதிர இயலுமா ?!
விடை மறைத்து நிற்கும் விடுகதை முடிந்தது
ஆம்; வாழ்க்கை வசப்பட்டது .
ஐயா உன் அருள் வேண்டும் ஆசி வேண்டும்
முன்னோர் வழிபாடு இம்மண்ணின் மரபு
முன்ஓர் பண்பாடி எம்விண்ணப்பம் நிறைவு
தண்ணியில்லாக் காட்டில் தரமான வெடித்தொழிலைக்
கண்போல் துவக்கிய துரைமக்கள் இருவருள் - ஒருவர்நீர்
நெல்லரிசி ஆட்டிய கல்லுரலில் ஈரத்துணியை அணைகொடுத்து
சுள்ளென்று தீப்பிடிக்கும் மருந்தாட்டிக் கொண்டுவந்தீர் ஒருபுரட்சி
ஊரின் தலையெழுத்தை மாற்றிய தொழிற்புரட்சி
பாரில் யாருக்கும் வழிகாட்டும் அறிவுப் புரட்சி
தோற்றுவித்த பெருமைக்கு உரியமாலை உம்
தோள்களைச் சேரவேண்டும் நியதியாக
மண்ணகத்தை விட்டு நீர் மறைந்த சமயம்
புண்ணியத்தைச் சேர்க்கும் இக்கல்லூரி உதயம்
கண்டோர் வியக்கும் இக்கல்லூரி முழுமைக்கும்
கருவூலமானது ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் அறக்கட்டளை
பல்கலை பயிலும் பாவையர் கூட்டம்
பெண்கல்வி ஓங்கிப் பெருமைபல எய்தும்
ஐயா உம் அருள் வேண்டும் ஆசி வேண்டும்.
No comments:
Post a Comment