முளைப்பாரிப்பாடல்- 1
ஒன்னாம் நாளு பாக்கும்போது- ஒசந்திருப்பார் அம்மன் முளை
ரெண்டாம் நாளு பாக்கும்போது- ரெண்டெலையும் கொண்டிருப்பா
மூனா நாளு பாக்கும்போது -முத்துப்போல எறங்கிருப்பா
நாலா நாளு பாக்கும் போது -நாகரத்தினம் போலிருப்பா
அஞ்சா நாளு பாக்கும்போது -பஞ்சவர்ணக்கிளி இருப்பா
ஆறா நாளு பாக்கும்போது -அலங்காரமாய்க் கொண்டாடுவாள்
ஏழாம் நாளு பாக்கும்போது- எடுத்துவைப்பாள் அம்மன்முளை
எட்டாம்நாளு பாக்கும்போது- கொட்டு முழங்குதல்லோ
குலவைச்சத்தம் கேட்டுதல்லோ
குழு: தானானே தானானே தானத்தந்தம் தானானனே
தானானே தானானே தானைத்தந்தம் தானானனே
வாராளம்மா வாராளே -முத்தாலம்மா வாராளே
சந்தனம் இது சந்தனம் -எங்க முத்தாலம்மா சந்தனம்
சந்தனத்தை அணிபவர்க்கு சங்கடங்கள் தீருமே
விபூதி இது விபூதி -எங்க முத்தாலம்மா விபூதி
விபூதியை அணிபவர்க்கு வினைகள் யாவும் தீருமே
குங்குமம் இது குங்குமம் -எங்க முத்தாலம்மா குங்குமம்
குங்குமத்தை அணிபவர்க்கு குறைகள் யாவும் தீருமே
ஜவ்வாது இது ஜவ்வாது -எங்க முத்தாலம்மா ஜவ்வாது
ஜவ்வாது அணிபவர்க்கு சங்கடங்கள் தீருமே
பூமாலை இது பூமாலை-எங்க முத்தாலம்மா பூமாலை
பூமாலை அணிபவருக்கு புது வாழ்வு அவள் தருவாள் பாமாலை இது பாமாலை -எங்க முத்தாலம்மா பாமாலை
பாடியவர் அனைவருக்கும் பக்கத்துணை அவள் இருப்பாள்
குழு: தானானே தானானே தானதந்தம் தானானனே
தானானே தானானே தானதந்தம் தானானனே
முளைப்பாரிப் பாடல்-2
முந்தி விநாயகரே முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே முன்நடவா
தொந்திக்கணபதியே தோகை மயில் வாகனனே
ஐயா கணபதியே ஆறுமுக வேலவரே
மஞ்சள் ஒரசி வச்சு மங்கையர்க சுத்திவந்து
மகுமையில பாருங்களே
செங்க ஒரசி வச்சு சிறுபிள்ளை சுத்தி வந்து
சிறுபிள்ளைக சுத்தி வர ;சுத்துரத பாருங்களேன்
இடி இடியா மழை பெய்ய; இருகரையும் பெருகிவர -அந்த
பெருகிவந்த தண்ணியிலே; பெண்களெல்லாம் நீராட
நீராடி நீர் தொளிச்சி ; நீலவர்ண பட்டுடுத்தி
கோலாடி கோலடிச்சி கோலவர்ண பட்டுடுத்தி -அங்கு
வாழைமரம் கொண்டுவந்து ;வாசலிலே வந்திறங்கி
அந்த அகத்திமரம் கொண்டு வந்து அழகாக பந்தலிட்டு
அந்த பச்ச ரயிட்ட கொண்டுவந்து பக்குவமா கட்டுங்களேன்
அந்த சிவப்பு ரயிட்ட கொண்டுவந்து சீக்கிரமா கட்டுங்களேன்
அந்த கோலவர்ண ரயிட்டுகள கொண்டுவந்து கோளாறா கட்டுங்களேன்
என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு
அங்க பெரியவீடு இன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா
அந்தப்பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மா
அந்த நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா
நம்ம காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா
அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு
கடல சிறுபயறு காரமணிப் பயறு
வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு
கொண்டுவந்த பயறுகள கொடத்துல ஊறப்போட்டு
ஆசாரி அழச்சு வந்து அழகா ஓடொடச்சி
கொசவனோட சில்லையில கொடத்தோட ஓடொடச்சி
ஆட்டாம் சிறுவர்களே ; ஆடு மேய்க்கும் பாலர்களே
ஆட்டாந்தொளி தொறங்க ;ஆட்டெருவெ வாரிவர
மாட்டாஞ்சிறுவர்களே ;மாடு மேய்க்கும் பாலர்களே
மாட்டாந் தொளிதொறங்க ;மாட்டெருவெ வாரிவர
அந்த வாரிவந்த எருவுகள வயசுப்பிள்ள தானிடிச்சி
அந்த கொண்டுவந்த எருவுகள கொழந்தப்புள்ள தானிடிச்சி
சம்சாரி படப்பேறி சம்பா வைக்கெ தானெடுத்து
முதலாளி படப்பேறி முத்து வைக்கெ தானெடுத்து
கம்பந்தட்ட ரெண்டெடுத்து கணுக்கணுவா மொளி நெருக்கி
சோளத்தட்ட ரெண்டெடுத்து சோகையோட மொளி நெருக்கி
சீராக எருவெடுத்து சிறப்பாக வைக்கலமிக்கி
வட்ட ஓடெடுத்து திட்டமுள்ள முளை பரப்பி
முளைபோட்ட மூனாம்நாளு முளைச்சதும்மா பயறுவகை
முத்து முளை தெரிக்க மோதிரக்கை சீராட
பவள முளை தெரிக்க பாதசரம் சீராட
மலடி வந்து மொளை தெளிப்பா ; மாணிக்கத்த பெத்தெடுப்பா
இருசி வந்து மொளை தெளிப்பா ;இளஞ்சியத்தைப் பெத்தெடுப்பா
ஒன்னான நாப்பொழுது ;ஊசி நெறம் ஆயிருவா
ரெண்டான நாப்பொழுது ரெட்ட நெறம் ஆயிருவா
மூனான நாப்பொழுது முத்து நெறம் ஆயிருவா
நாலான நாப்பொழுது நல்ல நெறம் ஆயிருவா
அஞ்சான நாப்பொழுது மஞ்ச நெறம் ஆயிருவா
ஆறான நாப்பொழுது அழகா சொரிஞ்சிருப்பா
ஏழான நாப்பொழுது எல்லோர்க்கும் தங்கிருப்பா
எட்டான நாப்பொழுது எல்லையில தங்கிருப்பா
ஒம்போதா நாப்பொழுது ஊரைவிட்டுக் கெளம்பிருவா
கொட்டு சத்தம் கேப்பாளோ ;கொலவ சத்தம் கேப்பாளோ
பத்தான நாப்பொழுது சாலகிணறு தேடிருவா
சிந்தாம செதறாம வளத்த நம்ம தாய
சித்தாத்து தண்ணிக்கு போறயாமா தாயே
ஒன்ன வாடாம வசங்காம வளத்தனம்மா தாயே
கோணாம கொணங்காம வளத்தேனம்மா தாயே
நீ கூடார சோலைக்கு போறயம்மா தாயே.
No comments:
Post a Comment