Monday, February 10, 2020

vanakkamum varaverpum







    
வணக்கமும் வரவேற்பும்
தேடிச்சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு 
கதைகள்பேசி நரைகூடிக் கிழப்பருவம்
எய்தியபிறகு ஏற்றிய படிகளைக் கூப்பிய
கரங்களுடன் திரும்பிப் பார்க்கிறோம்  
ஆறாம் வகுப்பிற்கு க்ஷத்ரியமகளிர்
உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்தோம்
பதினோராம் வகுப்பு  முடித்துப் பட்டாம்
பூச்சிகளாய்ப் பறந்து வெளிவந்தோம்.
மேற்படிப்பு, வேலைதேடல், கலியாணம்,
பிள்ளைப்பேறு, சமையல், சகிப்புத்தன்மை,
கூட்டுக்குடும்பம், குஞ்சுகளை வளர்த்தல், குடும்பப்
பொறுப்பு, மூத்தோர்பேணல், கடமை முடித்தல்,
உறவுச்சிக்கல், உலகின்போக்கு, ஓய்விலும் ஒழியாமை,
பேரன்திருமணம், பேத்திக்குப் பிள்ளைப்பேறு
எல்லாம் கடந்து மூச்சுவாங்கி நின்றால்;
அதற்குள் அரைநூற்றாண்டு ஓடிவிட்டது.
கூனாத மனம்கொண்டு; எமை ஈனாத தாயர் நீங்கள்!
வாழ்க்கைப்பாதையில் திசை காட்டிய வழிகாட்டி மரங்கள்!
காட்டாறாய் ஓடிய எங்களைக் கரைகட்டிக் காத்த காவலர்கள்!
தோட்டத்துப்பூக்கள் எங்களுக்குப் பாத்திகட்டிப் பண்ணையம் பார்த்தவர்கள்!
வெள்ளைத்தாள் மனதில் ஓவியங்கள் தீட்டிக் கனவுகளைக் காணப்
பிள்ளையார்சுழி இட்டு வண்ணமயமாக்கிய கிரியாஊக்கிகள்!
உல்லாசவானில் சிறகடித்த எங்களை வாழ்க்கை வரம்புக்குள்
பறக்கவிட்டுப்  பருந்துகளிடம் பாதுகாத்த ஆபத்பாந்தவர்கள்!
உள்ளம் சோராமல் உன்னி ஏறக் கற்றுக்கொடுத்த வித்தகர்கள்!
ஊட்டச்சத்து குறையாமல் அறிவுணவைச் செரிக்க வைத்த தாதிகள்!
துள்ளித்திரிந்த கன்றுகளின் எதிர்கால மிரட்சி நீக்கிய விளக்குத்தூண்கள்!
பிள்ளைப்பருவமதில் பள்ளம்மேடுகளில் நிதானிக்கவிட்ட விற்பன்னர்கள்!
சிக்கல் இல்லாத வாழ்வில் மக்குத்தனம் தான் மிஞ்சும் என்று
பக்குவமாய்ப் போதித்த உங்கள் கடமை தவறாக்  கண்ணியம்,
திக்குத்திசை காட்டும் கடப்பாட்டுடன் கூடிய ஏணித்தனம்,
மூடத்தனம் போக்கி முல்லையாய் மணக்கவைத்த முதன்மை;
அனைத்தையும் போற்றி வணங்குகிறோம்; வரவேற்கிறோம்.
1963-1969 மாணவிகள்

ச.கண்மணி

No comments:

Post a Comment