சக்கம்மாள் பாட்டு
தானானே தானானே என்தாயே சக்கம்மா
ஏழை நான் பாடப் போறேன் பாடவும் வகையறியேன்
பாடவும் வகையறியேன் வரலாறும் நானறியேன்
வரலாறும் நானறியேன் பாலனான நானும் உன்னைப்
பாடிப் பணிவதற்குஉன்னுடைய வரலாறு
சொல்லிப் படிப்பதற்கு உன்னுடைய கிருபையாலே
சொல்வாக்கு தந்திடம்மா என் தாயே வீரமல்லு
குளித்து முழுகியுமே குளக்கரை தன்னிலே
சேலையையும் காயப்போட காலைக்கண்ணும் ஓடிவந்து
வீரமல்லு சேலையையும் தாண்டியே போயிருச்சு (10)
எந்தாயி வீரமல்லு கர்ப்பமாக ஆனாளம்மா
ஒன்னாவது மாத்தையிலே உண்பதை மறந்தாளாம்
ரெண்டாவது மாத்தையிலே நெனச்ச பண்டம் சாப்பிட்டாளாம்
மூணாவது மாத்தையிலே முகமெல்லாம் வெளுத்தாளாம்
நாலாவது மாத்தையிலே நல்ல பண்டம் சாப்பிட்டாளாம்
அஞ்சாவது மாத்தையிலே அடிவயிறும் கனத்ததம்மா
ஆறாவது மாத்தையிலே - என்தாயே வீரமல்லு
அண்ணன்மார் சந்தேகப்பட்டார் இப்படியே விட்டோமானால்
கேவலமெ என்று சொல்லி அன்புத்தங்கை வீரமல்லை
வெட்டிவிட வேணுமின்னு வீரமல்லு வீரசின்னை (20)
மாடு மேய்க்கப் போனாங்க
மலைக்காட்டில் வீரமல்லை வெட்டியே போட்டாங்கம்மா
என் தாயி வீரமல்லை மலையிலேயே வெட்டினார்கள்
என் தாயி வீரமல்லு அண்ணன்மார் குடும்பத்தையும்
என் தாயி வீரமல்லு ஓலை அணியும் தெய்வமம்மா
வீரமல்லு வயித்தையும கிழித்து நல்லா பாக்கையிலே
காளைக்கன்னு வயித்துக்குள்ளே இருப்பதைப் பாத்ததுமே
அண்ணன் தம்பி ஏழு பெரும் அழுது புலம்பி நல்லே
தவித்துமே போனார்களே வீண்பழி சொல்லியும்
நம் தங்கை வீரமல்லை வெட்டியுமே போட்டோமே
கருவில் உள்ள கருவை எல்லாம் கருவழித்து விட்டாளம்மா (30)
காதோலை கருகமணி என் தாயி வீரமல்லுக்கு
மாராடி பாசிக்காரி என் தாயி வீரமல்லு
பார்ப்பார் பாசிக்காரி பத்தினி தெய்வமம்மா
உத்தமியாம் பத்தினியாம் ஒரு சொல்லு வாசகியாம்
பத்தினி தெய்வமம்மா என் தாயி வீரமல்லு
பழிச் சொல்லு கேட்டியேம்மா வீண் சொல்லு கேட்கவே
விதிச்சானே உடையவனும் பழிச்சொல்லு கேட்கவே
பகலானும் விதிச்சாரோ என் தாயி வீரமல்லு
தேடி அழைக்கிறேனே வீரமல்லு வீரச்சின்னா (40)
தெய்வ வடிவழகி வருந்தி அழைக்கிறேனே
என் தாயி வீரமல்லு வனக்கிளியே வந்திடம்மா
வாராளாம் வீரமல்லு வனமாம் வனம் கடந்து
மண் கோட்டை தாரோமம்மா என் தாயே வீரமல்லு
மண் கோட்டை வேண்டாமம்மா கல்கோட்டை தாரோமம்மா
என்தாயே வீரமல்லு கல்கோட்டை வேண்டாமம்மா
காந்தக்கோட்டை தாரோமம்மா என் தாயே வீரமல்லு
காந்தக்கோட்டை வேண்டாமம்மா எலந்த முள்ளு கோட்டையிலே
இருந்து நல்லா குடியிருப்பேன்
அனுப்பங்குளம்; பேராபட்டி ஆண்டு வந்தாள் காடம்மாள் (50)
பேராபட்டி ஊரிலுமே பேர் போக வரங்கொடுத்தாள்
ஒட்டர மரத்தடியில் எந்தாயி வீரமல்லு
கம்பளியைத் தான் விரிச்சி சக்தி கடா காவுகொண்டு
என் தாயி வீரமல்லு சக்கம்மானு பேரு கொண்டா
குட்டிக்கடா காவு கொண்டு கூசாமல் வாக்குத் தராள்
பாம்புன்னு சொன்னதால பாம்படம்மானு பெரு கொண்டி
நாகமின்னு சொன்னதால நாகம்மானு பேரு கொண்டா
பூச்சியின்னு சொன்னதால பூச்சியம்மானு பேரு கொண்டா
எலந்தமுள்ளு கோட்டைக்குள்ளே என் தாயி சக்கம்மாவும்
இருந்து நல்லா வரங் கொடுப்பா நாகம் குடை பிடிக்கும் (60)
அம்மா சக்கம்மா உனக்கு நல்ல பாம்பும் தாலாட்டும்
அஞ்சு தலை நாகமம்மா என் தாயே ஜக்கம்மாவே
ஆடி நின்னு தாலாட்டும் பத்து தலை நாகம்மாவே
என் தாயே சக்கம்மாவே உனக்கு பாடிநின்னு தாலாட்டும்
கருநாகம் செந்நாகம் அம்மா கலந்து நின்னு தாலாட்டும்
அம்மா உன் மார் மேலே நாகம்மா உன் மடி மீதும் புரண்டாடும்
தோளு மேலே நாகம்மா உன் துடை மேலே புரண்டாட
ஒம்பது கம்பளத்தில் என் தாயி ஜக்கம்மா
ஓலையணியும் தெய்வம்மா கையிலிடும் கருவளையல்
என் தாயே ஜக்கம்மா கம்பளத்தில் பிறந்தவளாம் (70)
மாராடி பாசிக்காரி என் தாயே ஜக்கம்மாளே
உன் ஏழைக் குழந்தையம்மா கூப்பிட்டு நான் அழைச்சேன்.
(முற்றும்)
No comments:
Post a Comment