Sunday, November 22, 2020

நான் விரும்பும் விழா - பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப் பேச்சு

                                        அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் .

மனித வாழ்க்கையில் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு .
ஏற்றமும் உண்டு; தாழ்வும் உண்டு.
நன்மையும் உண்டு; தீமையும் உண்டு.
இவ்வாழ்வில் இன்பத்தையும், ஏற்றத்தையும், நன்மையையும் நாடிச் செல்லாத
மனிதமனமே இல்லை.
ஆம். மனிதன் இன்பம் எங்கே? எங்கே? என்று தேடி அலைகிறான்.
விழாக்கள் மனிதனுக்கு இன்பமூட்டவே ஏற்படுத்தப்பட்டவை.
விழாக்களில் தான் எத்தனை வகைகள்!
                                  தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற சமயம் சார்ந்த விழாக்கள்.
                                  சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாடு சார்ந்த விழாக்கள் .
                                  ஓணம், தைப்பொங்கல் போன்ற பருவம் சார்ந்த விழாக்கள் .
இவற்றுள் ‘நான் விரும்பும் விழா எது?’
இக் கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா? 
                                                                        உனக்கு மிகவும் பிடித்த இனிப்பு எது? 
லட்டா? அல்வாவா?  பால்கோவாவா? என்று கேட்பதைப் போல் தான் உள்ளது.
எல்லாம் தான் பிடிக்கும்; விழாக்களிலும் எல்லாம் தான் பிடிக்கும்.
ஆனாலும் மனதிற்கு மிகவும் நெருக்கமான இன்பத்தைத் தூண்டும் விழா- 
‘தமிழர் திருநாள்‘ என்று போற்றப்படும் தைப்பொங்கல் விழா தான்.
தைமாதத்தின் முதல்நாள் தமிழகத்தில் அறுவடைத் திருநாள் என்று பொருள்படும் 
படியாகத் தைப்பொங்கல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மண்ணை நம்பி வாழும் மனிதரின் உழைப்பிற்குக் கூலியாய் மண்மகள் கதிர்களைப்
பரிசளிக்கும் நாள் தைத்திருநாள் ஆகும்.
இதைத்தான் இன்றைய புதுக்கவிஞரும்,
                        ”பொங்கல் திருநாள் -இது 
உழவர்களின் வியர்வைக்கு வெகுமதி நாள்“ என்று பாடியுள்ளனர்.
பொங்கல் கொண்டாட தாத்தா வீட்டிற்குப் போவது தான் முதல் சந்தோசம்.
கதிர்க் கடவுளுக்கு சர்க்கரைப் பொங்கலிட்டு, 
தோகைக் கரும்பினை வைத்து அழகு செய்து, 
வீடுகளில் மாக்கோலமிட்டு, 
தோரணத் தொங்கலிட்டு, 
புத்தாடை புனைந்து, 
நண்பர்களுக்கு வாழ்த்தனுப்பி, பொங்கல் விழா கொண்டாடுவோம். 
கரும்பின் இனிமையும், பொங்கலின் நறுமணமும் என் மனதை விட்டு நீங்காது.
அன்று வழக்கிலிருந்த மாக்கோலம் மாறிப்போய்;
சுண்ணாம்புக் கோலமாகி;
இன்று வண்ண வண்ண பெயிண்ட் கோலமாகத் திரிந்துள்ளது. 
ஊர் முழுவதும் ஒன்றுகூடி; 
ஒலிபெருக்கியில் பாட்டு முழங்க;
 கபடிப்போட்டி வைத்து;
மறுநாள் மாட்டுப்பொங்கல் என்று கொண்டாட்டம் நீளும்.
சுற்று வட்டாரமெல்லாம் பொது இடத்தில் கூடி; 
 மாடுபிடி ஜல்லிக்கட்டு நடத்தி; 
மாலையில் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டுவண்டி ஓட்டப்பந்தயம் என
நம் பண்பாட்டுக்கூறுகள் எல்லாம் உயிர்பெறும் நாள் தைப்பொங்கல் திருநாள் தான்.
எனவே எனக்கு தைப்பொங்கல் தான் பிடித்த விழா .
                                                                                நன்றி
                                                                             வணக்கம்

No comments:

Post a Comment