என் அன்பின் ஆசிரியர்க்கு முதல் வணக்கம்
நான் ஆசிரியரானால்...
தாய் மண்ணின் வருங்கால வாரிசுகளை உருவாக்கும் பொறுப்பைத்
திறம்பட ஏற்று நடத்துவேன்.
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் பொன்மொழிக்கேற்ப;
அத் தொழிலைப் புனிதமானதாகக் கருதிச் செயலாற்றுவேன்.
கண் போன்ற கல்வியை மாணவர் உலகம் முழுவதும்;
சாதிமத வேறுபாடின்றிப் பெற்றிட வழிவகை செய்வேன்.
நம் இதிகாசங்கள் காட்டும் துரோணாச்சாரியார் போலவோ;
பரசுராமர் போலவோ
பிறப்பால் உயர்வு,தாழ்வு பாராட்ட மாட்டேன்.
ஏற்றத் தாழ்வின்றிக் கல்வியை எல்லோரும் பெறும் வண்ணம்
திட்டங்கள் தீட்டுவதோடு மட்டுமின்றி; அவற்றைச் செயலிலும் காட்டுவேன்.
காசுக்குக் கலை வாங்கும் நிலை போல;
காசுக்குக் கல்வியை வாங்கும் நிலை இன்றைய சமுதாயத்தில் பெருகியுள்ளது.
இந்த அவலம் அபாயகரமானது.
முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய நச்சு.
நான் ஆசிரியரானால் கல்வித்துறையின் மேலிடத்தோடு;
இந்நிலை நீங்கப் போராடுவேன்.
ஆங்கிலேயர் வகுத்த கல்வித்திட்டத்தால் இருநூறு ஆண்டுகளாக;
எழுத்தர்களை உருவாக்கிய அவலநிலை
இன்னும் நம் நாட்டை விட்டு நீங்கவில்லை.
கல்வித்திட்டம் மாறி;
கற்றவர் தரம் ஓங்க;
பள்ளிக்கூடம் முதல் மாணவர்க்குத் தொழிற்கல்வி பயிற்றுவிக்க...
வழிவகை செய்வேன்.
தலைசிறந்த ஆசிரியர்; மாணவர் உள்ளம் கவர்ந்த உத்தமராகத் திகழ்வார்.
மாணவர் மனம் கவர;
அவர்கள் மனம் போன போக்கில் கல்வியைத் தவிர்ப்பது தக்கது அல்ல.
வேம்பும் கடுவும் கசந்தாலும் மருந்தாய் அமைவது போல;
மாணவர்களைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட அன்பில் நெறிப்படுத்துவேன்.
கல்வி வளாகத்திற்குள்...
மாணவர்க்குப் பெற்றோர் போன்ற உறவு நிலையை உருவாக்கிக் கொள்வேன்
பொதி சுமக்கும் கழுதைகள் போல்;
மாணவரைப் புத்தகச்சுமை தூக்க வைக்காமல்;
அறிவுச் சுமையை அவர்கள் சிந்தையில் ஏற்றுவேன்.
மனப்பாடத் திறனைப் பெருக்குவதே தலையாய கடன் என்று கருதாமல்;
சிந்திக்கத் தூண்டுவதும்;
அறிவைப் பெருக்குவதுமே கல்வியின் நோக்கம்...
என்ற கொள்கையோடு பணி புரிவேன்.
கூடுதல் மதிப்பெண் பெறுவதே குறைவற்ற கல்வி...
என்ற தவறான கொள்கை பரவிவரும் இக்காலத்தில்;
மதிப்பெண்கள் அறிவுத் திறனுக்குரிய அளவுகோலாய் அமைவதில்லை...
என்பதைப் புரிந்து செயல்படுவேன்.
பிறர்க்கும் புரிய வைப்பேன்.
புத்தகப் புழுக்களாய் மாணவரை மாற்றாமல்;
செயல் திறன் மிக்கவர்களாய் உருவாக்க;
அவர்களது முழுமையான ஆளுமையை மேலோங்க வைப்பேன்.
ஆசிரியத் தொழில் என்றாலே; சம்பள உயர்வு கேட்கும் சாரமற்ற தொழில்...
என்ற தவறான கருத்து நிலவுகிறது.
அதை மாற்றி அத்தொழிலின் புனிதத்துவத்தை நிலைநாட்டுவேன்.
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’
என்ற கொள்கையோடு;
செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதி;
உன்னதமான ஆசிரியர் என்று பெயரெடுக்க முற்படுவேன்.
நன்றி
வணக்கம்
No comments:
Post a Comment