அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
கேள்விக்குறியா?ஆச்சரியக் குறியா?
திருவள்ளுவர் வினாத் தொடுக்கிறாரா? வியப்படைகிறாரா?
"ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும் "
என்று தன் குறளை அடுத்தாற் போல் முடித்துக் காட்டுவதைப் பார்த்தால் வியப்புக்குறியோடு வினாத்தொடுப்பது போல் தான் தெரிகிறது.
அன்பிற்குத் தாழ் இல்லை என்பதை இலக்கியங்களிலும் காணலாம்.
அதற்கு வரலாற்றிலும் சான்றுகள் உள்ளன.
புராண இதிகாசங்களும் இக்கருத்தைப் பொய்யாக்கவில்லை.
அன்றாட உலக வாழ்வும் இதன் உண்மையைப் பறை சாற்றும்.
ஆண்டாண்டு காலமாக உலக நடப்பில் இந்த அன்புப் பெருக்கைக் கண்ணீர்ப் பெருக்கு காட்டிக் கொடுத்து வருவது நாம் அறிந்தது தான்.
மயிலுக்குப் போர்வை தந்த பேகனும், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் அன்புமிகுதியால் தான் கொடைமடம் பட்டனர்.
மன்னர் மக்கள் மேல் வைத்த அன்பு மக்களை வாழ வைத்தது. அதனால் தான்
"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
என்றனர் புலவோர்.
அன்பு பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் நுண்பொருள்.
அதனால் தான் அன்று மன்னன் மக்கள் மேல் அன்பு கொண்டு தலையளி செய்ய; மக்கள் மன்னன் மேல் அன்பு கொண்டு அவனை இறைவனாகப் பாவித்தனர்.
தாய் குழந்தையிடம் கொண்ட அன்பால் அதைப் பாராட்டிச்சீராட்டுகிறாள். குழந்தை தாய்மேல் கொண்ட அன்பு; அவன் சான்றோனாக அடிப்படை ஆகிறது. அவனைக் குவலயத்தில் தலைநிமிர வைக்கிறது.
தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து திளைக்கிறாள்.
'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி '
நின்றார் திருஞான சம்பந்தர். சிவபெருமான் மேல் பக்தி கொண்ட நாயன்மார்கள், வள்ளலார் ஆகியோருக்கு அந்த பக்தியே உருகிக் கண்ணீராக ஓடியது.
எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணும் போக்கு மனிதனிடம் ஏற்படக் காரணமாய் அமைவது அன்பு.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அன்புமிகுதியால் தான் அருள் மிகுந்த மனிதர் ஆனார். அவரது வாட்டத்திற்கு அஃறிணைப் பொருட்களின் மேல் கொண்ட அன்பே காரணம்.
'லேடி வித் ய லாம்ப் ' என்று பட்டம் தாங்கிக் கையில் விளக்கேந்திப் போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு அருமருந்தாய் அமைந்தாள் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்- அன்புக் கண்ணீருடன்.
எங்கோ பிறந்து; இங்கே நம்நாட்டில் வாழ்ந்த அன்னை தெரசா; தொண்டுள்ளம் கொண்டு வடித்த அன்புக் கண்ணீர்;
இந்த இந்தியத் திருநாட்டில் கணக்கற்ற நோயாளிகட்கும்,
ஆதரவற்ற முதியோர்கட்கும்,
திக்கற்றுத் தவிக்கும் அனாதைக் குழந்தைகட்கும்
வழி காட்டும் ஒளி விளக்காயத் திகழ்ந்தது.
"அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே ."
என்ற திருமூலர் வாக்கின்படி அன்பு தான் இறைவன் , பக்தி, வாழ்வின் உயிர்நிலை எல்லாம்.
அன்பின் விளைவாக சகிப்புத்தன்மை பெருகுகிறது.
தியாக உணர்வு மேலோங்குகிறது.
ஆத்ம திருப்தி அளப்பரியதாகிறது.
பண்பிற்கு வித்திடுவது அன்பு
பணத்தின் பகட்டைப் போக்குவதும் அன்பு
தாய்மைக்கு அடிப்படையாவதும் அன்பு
சகோதரத்துவத்தின் சாரமாய் அமைவதும் அன்பு.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் பாலமாய் அமைவதும் அன்பு
அன்பும் அறனும் உள்ள வாழ்க்கையே பயனுள்ள வாழ்க்கை
அன்பு தான் இன்ப ஊற்று ;
அன்பு தான் உலகஜோதி;
அன்பு தான் உயிர்க்கு உணவு .
மனத்தின் ஆழத்திலிருந்து தோன்றும் அன்பால் மறக்கவும் மன்னிக்கவும் வழியேற்படுகிறது.
போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம்.
பின்வரும் சந்ததியினர் அறுவடை செய்வர்.
நன்றிவணக்கம்
No comments:
Post a Comment