அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்.
உலகத்து உயிர்கள் கோடானுகோடி வகையின.
அன்பு அவை அனைத்தையும் கட்டிவைக்கப் பயன்படும் கயிறு போன்றது. இதனால் தான் வள்ளுவர் ,
"அன்பின் வழியது உயிர்நிலை அ ஃ திலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு"
என்று பாடி வெறும் எலும்பும் தோலும் போர்த்த உடம்புடையோராகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டோரைக் காரணத்தோடு வசை பாடுகிறார்.
திருவள்ளுவர் வசைபாடுவதில் வல்லவர்.
அவரது வசைச் சொற்கள் 'சுரீர்' என்று உரைக்கும்.
அன்புக்கயிறுக்குக் கட்டுப்படாதோரை ஜடம் என்று திட்டுகிறார்.
இந்த அன்புக்குப் பல முகங்கள்…
அது நட்பாக மலரலாம்.
காதலாகக் கனியலாம்
பக்தியாகப் பெருகலாம்.
தாய்மையாகி உருகலாம்.
சகோதரத்துவமாய்ப் பரிமளிக்கலாம்.
இரக்கமாகி இணையற்று ஓங்கலாம்
அன்பு இல்லையென்றால் உறவு இல்லை.
அன்பு இல்லையென்றால் அருள் இல்லை .
அன்பு இல்லையென்றால் வள்ளல் தன்மையும் இல்லை
மக்களுக்கிடையில் மனம் பண்படுவதும் அன்பினால் தான் ஆகும்.
அன்பு இருக்கும் போது மனிதன் அடுத்தவர் மனம் புண்படச் சகியான்.
அன்பு மிகுந்த மனிதன் ஏழைகளைக் கண்டு இரங்குவான்.
அன்பு நிறைந்த மனிதன் தன்னலமற்றவனாய் உயர்வான்.
No comments:
Post a Comment