Sunday, November 22, 2020

அன்பே கடவுள் - பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப் பேச்சு

அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். 

“அன்பின் வழியது உயிர்நிலை“ என்று உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும் வாழ்விற்கு அடிப்படையே அன்பு தான் என்று ஆணித்தரமாகக் கூறிய வள்ளுவர் வாழ்ந்த சமுதாயம் இது .

அன்பைப் போற்றாத உலகத்துச் சமயம் எதுவும் இல்லை.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் 

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் 

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் 

அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” எனத் திருமூலர் பாடியதன் 

பொருள் ’அன்பே கடவுள்’ என்பது தான்.

அந்த அன்பு ஒவ்வொரு உயிரினிடத்தும் உள்ளது. ஒவ்வொரு ஜீவாத்மாவுக்குள்ளும் பரமாத்மா நிறைந்துள்ளது என்கிறது அத்வைதம்.

‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று அறைந்த பௌத்த சமயமும்,

‘அன்பு தான் இன்பஊற்று; அன்பு தான் வாழ்வின் வழிகாட்டி’ என்று எல்லோரையும் நெறிப்படுத்துகிறது.

‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ காட்டிய கிறித்துவம் அன்பு என்னும் கயிற்றால் இயேசுபிரான் மக்கள் மனதைக் கட்டிப்போட்ட சூட்சுமத்தைப் பேசுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தன் வருமானத்தில் ஒரு பகுதியைச் சமூக நலனுக்காகச் செலவிட்டுத் தானம் செய்ய வலியுறுத்திய இசுலாம் அன்பையே அதற்குரிய ஆதாரமாகப் பறைசாற்றுகிறது.

சர்வசமய சன்மார்க்கம் பேசிய வள்ளலார் அன்பையே வலியுறுத்தினார். 

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்று ஒளி வடிவமாக 

இறைப் பொருளைக் கண்ட இராமலிங்கரின் சமயப்பொறை அன்பை அடியொட்டியே அமைந்தது.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி”ய வள்ளலார் ஜோதி வடிவமான இறைவனைத் ‘தனிப்பெருங்கருணை’ என்று அடைமொழி கொடுத்து அழைப்பது - அவன் ஒப்பற்ற பெருமை மிக்க அன்பு வடிவமானவன் என்று வலியுறுத்துவதற்காகத் தான்.

“அன்பினைக் கைக்கொள் என்பான்- துன்பம்

அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்” என்று 

கண்ணனைத் தந்தையாக நோக்கிய பாரதியாரும் வாழ்வாதாரம் அன்பே என்கிறார்.

“ஆவியின் உள்ளும் அறிவின் இடையிலும் அன்பை 

வளர்த்திடுவோம்”

என்று பாரதியார் 20ம் நூற்றாண்டில் பாடியதன் உட்பொருள் ‘அன்பே கடவுள்’ என்ற தாரகமந்திரம் தான்.    

திருவள்ளுவர் தொடங்கி திருமூலர், வள்ளலார், பாரதியார் எனத் தமிழகத்துப் பெருமக்கள் மட்டுமின்றி வடஇந்தியாவில் தோன்றிய புத்தரும் , மேலை நாடுகள் போற்றும் இயேசுபிரானும், முகம்மது நபியும், ஒருசேர உணர்த்தும் உண்மை ‘அன்பே கடவுள்’ என்பது தான்.

                                                                    நன்றி 

                                                                            வணக்கம் 

No comments:

Post a Comment