அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்.
நட்பு- இது அன்பின் பலமுகங்களில் ஒன்று.
முகம் மட்டும் மலர்ந்தால் அது உண்மையில் நட்பன்று. மனதை மலரவைக்கும் நட்பே உண்மையான நட்பு.
தூயநட்பு துன்பக்காலத்தில் துணைக்கரம் நீட்டும்;
இழப்புக் காலத்தில் ஈடுகட்ட முற்படும்;
எதிர்பார்க்கும் காலத்தில் எண்ணியதை முடிக்க உதவும்.
இத்தகு பெருமைமிகு நட்புக்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன.
இலக்கியங்களிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
வாழ்க்கையில் ஆங்காங்கே வளமார் உதாரணங்களும் உள்ளன.
"காவினம் கலனே சுருக்கினம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
என்று வீறாப்புப் பேசிய ஔவையார் அதியமானிடம் கொண்ட அன்பு நெருக்கமான நட்பாகவே மலர்ந்தது. அந்த நட்பை அரிதாகப் போற்றிய அதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவைக்கே கொடுத்து மகிழ்ந்தான். ஔவை தன் பாணர் குழுவுடன் அதியனின் அரண்மனையிலேயே தங்கியிருந்தாள். அதியனின் மகன் பிறந்தபோது அந்த மகிழ்ச்சியில் திளைத்தாள். அதியனின் நாட்டைப் போர்மேகம் சூழ்ந்தபோது அவனுக்காகத் தூது சென்றாள். துன்பக் காலத்தில் துயர் துடைத்த இச்செய்கை அவர் கொண்ட நட்பின் அடையாளமாக அமைந்தது. அவன் இறந்தபோது அவள் கையற்று ஏங்கி அழுத கண்ணீர் இன்றும் அவளது பாடலை ஈரமாக்கி நனைத்துக் கொண்டு இருக்கிறது.
தந்தை பாரியைப் பறிகொடுத்த பெண்மக்கள் நிலவைப் பார்த்து அழுதனர். மலையைப் பார்த்து மலைத்தனர். ஆதரவில்லாது தவித்த அவர்கட்கு பாரியின் நண்பர் கபிலர் தன் ‘புலனழுக்கற்ற அந்தணாள’த் தன்மையுடன் உற்ற துணையானார். ஒவ்வொரு மன்னனையும் நாடிச் சென்று அவர்கட்கு வரன் வேண்டி நின்றார். பெற்ற பெண்ணுக்குத் தந்தை மணமுடிப்பதே பேரிடரான விஷயம். உற்ற தோழன் உயிர் போன பின்னால்; அவன் பெற்ற மகளிர் இருவரும் கலங்குவது கண்டார்; தான் கலங்கினார்; மூவேந்தரின் பகையையும் பொருட்படுத்தவில்லை. துணிவுடைய செந்நாப்புலவரல்லவா? ஓயவில்லை; தயங்கிப் பின்வாங்கிய மன்னர்கள் ஒவ்வொருவரையும் தாண்டித் துணிவுடைய மணமகனைக் கண்டுபிடித்தார். தன் கடமையை முடித்தார். அவர் அகநகக் கொண்ட நட்பு; அந்நண்பனை இழந்த பின்னரும் அவனது சந்ததியின் துயர் துடைத்தது.
கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் இடையிலிருந்த நட்பு அன்றைய தமிழ்ச் சமுதாயத்தை வியப்பில் ஆழ்த்தியது. வயோதிகக் கோளாறோ? தலைமுறை இடைவெளியோ? தான் பெற்ற பிள்ளைகளுடன் மனமாறுபாடு அடைந்தான் கோப்பெருஞ்சோழன். அன்றைய சமுதாயத்தில் அவனுக்கு அது பெருத்த அவமானமாகத் தோன்றியது. இன்றைய சமுதாயத்தில் தான் இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம். அன்றைய சமுதாயத்தில் அப்படி எதுவும் இல்லை. அதனால் கோப்பெருஞ்சோழன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வடக்கிருந்தான்; அதாவது உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டான். தானமர்ந்த இடத்தினருகே தன் நண்பர்- தனக்காக- தன்னைப்போல் வடக்கிருக்க வருவார் என்ற நம்பிக்கையுடன் இடம் ஒதுக்க வைத்தார். அவரது எதிர்பார்ப்பின் படியே பிசிராந்தையாரும் வந்தார்; வடக்கிருந்து உயிரை விட்டார். இது பண்டைத் தமிழகம் கண்ட அகநக நட்ட அன்பின் வரலாறு .
இன்றைய சூழலில் மனிதர்க்கிடையில் ஏற்படும் நட்பைவிட நாடுகட்கு இடையே ஏற்படும் நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னொரு உலகமகா யுத்தத்தைத் தவிர்க்க நாடுகட்கு இடையிலான நட்புறவு மட்டுமே வழிகோலும். இந்த நட்பை வளர்க்கத்தான் விளையாட்டுப் போட்டிகளும், கலாச்சார விழாக்களும், நடைபெறுகின்றன. தூதுக்குழுக்கள் இயங்குகின்றன. இந்நட்பும் அகநக நட்பதாக இருந்தால் மட்டுமே அமைதி விளையும்.
No comments:
Post a Comment