அனைவருக்கும் அன்பு வணக்கம்
பெற்றோர் போடும் சோற்றில் வாழும் வாழ்க்கை மாறிப் பிள்ளையாய்ப் பிறந்த
அனைவரும் தத்தம் கால்களில் நிற்கும் காலம் ஒன்று வரும்.
அப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன்? இது தான் கேள்வி.
மருத்துவராகவோ/
பொறியாளராகவோ/
சிலிகான் பள்ளத்தாக்கின் பெருங்கூட்டத்தில் ஒருவனாகவோ
வாழ எனக்கு விருப்பமில்லை.
ஒரு அரசியல் சீர்திருத்தவாதியாக வாழ ஆசைப்படுகிறேன் நான்.
கோடிகோடியாய்ப் பணம் தேடிக்குவித்து கொள்கையற்று வாழ நினைக்க வில்லை நான். மாடிமாடியாய் வீடுகட்டி மகிழ்ந்து மமதையில் திளைக்க மனம் இல்லை எனக்கு.
என்னுடைய கனவு ஒரு உன்னதமான அரசியல்வாதி ஆகவேண்டும் என்பதே.
அலங்காரப் பந்தல்…………………… ஆளுயரப் போஸ்டர்
அசுர அளவில் கட்டவுட்……………. அயல்நாட்டில் ஆரோக்கியம்
கறுப்புப் பூனைப் பாதுகாப்பு ……….. கால் வைக்கப் பூத்தூவல்
சாரிசாரியாய்க் கார்கள்……………....பறக்கும் பலூனில் பளபளக்கும் பெயர்,
மேடையேற மலர்க்கொத்து …….....மேலை நாட்டு உடை
உட்காரச் சிம்மாசனம்………………. உலகம் வியக்கும் ஊர்கோலம்
தங்கத்தால் கிரீடம் …………………...வைரத்தால் வாள்
எதுவும் எதிர்பார்க்காத அரசியல்வாதியாக நான் இருப்பேன்.
என் தலைமையில்;
நாடு முழுமைக்கும் ஒரே கல்வித்திட்டம்;
வேளாண்மைக்கே முதலிடம்;
நதிகள் எல்லாம் நாட்டுடைமை;
சாதி மத வேறுபாடின்றி ஒரே சட்டம்;
பொருளாதார ஏற்றத் தாழ்வின்றி சமச்சீரான மருத்துவம்;
குளறுபடி இல்லாத கூலிமுறை;
உடல் உழைப்பிற்கு ஏற்றமிகு மதிப்பு
எல்லா மாநிலத்திற்கும் மும்மொழித் திட்டம்
மரபிற்கும், இயற்கைக்கும் பாதுகாப்பு
என குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு பயணப்படுவேன்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனம் பெறுவேன்.
வறுமை ஒழிப்பை வாழ்வின் லட்சியமாய்க் கொள்வேன்.
சிறுமை கண்டால் சீறி எழவும் தயங்க மாட்டேன்.
பொறுமை மிகுந்து பூசல் பலவும் தீர்ப்பேன்.
எருமை போலச் சோம்பித் திரிவோர்க்கு;
எறும்பு போலாகிச் சுறுசுறுப்பை ஊட்டுவேன்.
எத்தர்களாய் வாழ்வோரை இனம்கண்டு தேய்ப்பேன்.
உத்தமராய் வாழ உலகோர்க்கு வழி காட்டுவேன்.
எளிமைக்கே ஏற்றம் அளித்து இதயம் மகிழ்வேன்.
பினாமியில் சொத்து சேர்த்துப் பெருந்தொழில் புரிய மாட்டேன்.
சத்தியம், அகிம்சை இவையெல்லாம் சொல்லளவில் இல்லாமல்;
செயல்படுத்திக் காட்டும் கர்மவீரனாக நான் திகழ்வேன்.
நம்நாட்டு அரசியலைச் சாக்கடை என்ற நிலையிலிருந்து;
சந்தனமாய் மாற்றித்;
தலைசிறந்த குடிமகனாய் வாழ்ந்து;
அரசியல் சீர்திருத்தவாதியாகத் திகழ்வதே
என் எதிர்கால லட்சியம் ஆகும்.
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment