அனைவருக்கும் வணக்கம்.
நான் விரும்பும் பறவை……
காலைக் கதிரவன் உதிக்கும் போது;
நம் கண்களை விழிக்க வைப்பது; நம் காதுகளை மோதும் பறவைகளின் கானம்.
அவை பார்ப்பதற்கும் பலரகம்;
கேட்பதற்கும் பலரகம்.
கூவிக் கவரும் பறவையும் உண்டு.
கரைந்து இழுக்கும் பறவையும் உண்டு.
பேசிப் பயிலும் பறவை ஒன்று உண்டு…
அதுவே என் உள்ளம் கவர்ந்த கிளி.
கொஞ்சு மொழி பேசும் கிளியை விரும்பாத குழந்தைகள் இருக்க முடியுமா?!
பசுமை வண்ணம்… கண்ணுக்குக் குளிர்ச்சி.
சிவந்த இதழ்கள் … மனதைக் கவரும்.
செல்லமாக வளர்ப்பதற்கு ஏற்ற பறவை கிளி.
பெரும்பான்மை நாம் காண்பது பச்சைக்கிளி
கூண்டில் வளர்வதால் கூண்டுக்கிளி.
வீட்டில் வளர்க்கும் கிளி நாம் இடும் சோற்றை உண்பதால் அன்னக்கிளி.
பஞ்சவர்ணக் கிளி பெயருக்கேற்ப ஐந்து வண்ணங்களைக் கொண்டது.
மிருகக்காட்சி சாலைக் கூண்டில் மஞ்சள் கிளியும் கண்ணைக் கவர்ந்தது.
பல வண்ணக் கிளிகளை வைத்து சர்க்கஸில் சாகசங்கள் செய்து;
சாதனை புரிந்ததைக் கண்டேன்; மகிழ்ந்தேன்.
நாம் பேசும் பேச்சைப் பயிலும் கிளி ‘அக்கா‘ என்று அழைக்கும் அழகே தனி.
’சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ எனும் வழக்கும்;
அதனால் தானே உருவானது.
செல்ல மகளை வளர்ப்பதற்கும்;
கிளியை வளர்ப்பதற்கும் சமுதாயம் வேறுபாடு காணவில்லை.
குழந்தை கொஞ்சிப் பேசினால் ‘கிளிப் பேச்சு’ என்று தான்;
பெற்றோர் சொல்லி மகிழ்கின்றனர்.
தகுதியற்ற மனைவாழ்க்கை அமையும் பெண்ணைச் சுட்டும் சமூகம்
“கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பதா ? “ என்றே கேள்வி கேட்கிறது.
பார்ப்பதற்கு அழகான கிளியின் மூக்கு மிகவும் கடினமானது;
கொட்டைகளை உடைத்துத்தின்ன இறைவன் படைத்திருக்கும் அற்புதம்.
கிளிமூக்கு என்று பெயர் படைத்த மாம்பழம் கூட;
அந்தக் கிளியின் பெயரால் எனக்கு கிளர்ச்சி ஊட்டும் சுவை மிகுந்தது.
அது மட்டுமில்லை;
பஞ்சவர்ணம் என்னும் பெயராலும் மாம்பழம் உள்ளது.
இப்படிக் கிளியின் பெருமையும் மாம்பழத்தின் பெருமையும்...
ஒன்றோடொன்று பின்னி உள்ளன.
புராணங்களில் கிளிக்குத் தனியிடம் உண்டு.
மன்மதனின் வாகனம் கிளி.
சுகமுனிவர் கிளியின் தலை உடையவராம்.
சாமான்ய மக்களின் மனக்கிலேசங்களை நீக்க வழி என்ன?
தெருவோர ஜோசியன் வயிறு வளர்க்க;
சீட்டெடுத்துக் கொடுக்கும் சிறப்பான சிற்றுயிர் கிளி.
அமைதி மொழிகளை அள்ளி வீசி அடுத்த நொடியில் நிம்மதி தரும்.
ஓவியன் கைபட்டால் கிளியின் அழகு கொஞ்சும்.
சுட்டு விரலில் சேர்த்தால் கிளியின் பேச்சு மிஞ்சும்.
ஆசை மிகுந்தால் பாவலன் பாட்டில் இடம் தஞ்சம்.
இன்னும் பேசினால் இனி இல்லை நேரம்; பஞ்சம்.
எனவே நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment