ஆன்றமைந்த அவையோர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
பிறவிகளுள் உயர்ந்தது மனிதப்பிறவி.
”அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”
என்று பாடினார் ஒளவைப்பிராட்டியார்.
மனிதராய்ப் பிறந்த நாம் இப்பிறவியின் மேன்மையை அறிகின்றோமா?
இல்லை.
மனிதப் பண்புகளைக் கெடுத்து வாழ்கின்றோம். அக்கேட்டிற்குத் துணை செய்யும்
கருவிகளுள் ஒன்று சினம்.
சினம் ஏற்படும் போது மனிதனின் மென்மைப் பண்புகளும், மேன்மைப் பண்புகளும்
அழிகின்றன. இதனால் தான் வள்ளுவர்
”தன்னையே கொல்லும் சினம்”
என்கிறார். சினம்;
கொலைக்குப் பயன்படும் ஆயுதம்.
குடும்பப்பிளவுகளுக்குக் காரணம்.
அறிவு இழக்கச் செய்யும்.
அவசர புத்தியைக் கொடுக்கும்.
விலங்குகளுக்குச் சினம் ஏற்பட்டால் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும்
அழிகின்றன. யானையின் சினம் பாரதியை வாழவிடவில்லை. அவர் ஒவ்வொரு
நாளும் கோயில் யானைக்கு உணவு அளித்தார். ஆனால் ஒருநாள் மதம் பிடித்துச் சினம்
கொண்ட யானை தனக்கு உணவளித்தவர் என்றும் பாராது அவரைத் துதிக்கையில்
வளைத்துக் கீழே தள்ளியது. பாரதியின் இறப்புக்குக் காரணமாய் அமைந்தது.
ஹிட்லரின் சினம் அவரையும் அழித்தது; அவர் தேசத்தையும் அழித்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கள்வன் என்று கருதிய போது,
”கொன்றச் சிலம்பு கொணர்க“
என்று ஆராயாமல் சொல்ல வைத்தது சினம்.
தன் தேவியின் சிலம்பைத் திருடியவன் மீது கொண்ட சினம்-
தன் தேவி தன்மேல் கொண்ட சினத்தைத் தணிக்க மேற்கொண்ட அவசரம்-
அனைத்தும் சேர்ந்து ஒரு பத்தினியைப் பதைத்து எழ வைத்தது.
பாண்டியன் அழிவுக்குக் காரணம் ஆனது.
அவன் மனைவி உயிருக்கும் உலை வைத்தது.
ஒரு மாநகரின் அழிவுக்கு அடிப்படை ஆனது.
மாறாத பழியைப் பாண்டியன் குலத்திற்கு ஏற்படுத்தியது.
ராமாயணத்தில் மிகுந்த வலிமை பெற்றவன் எனப் புகழ் பெற்ற ராவணன் தன்னை
இடித்துரைத்த அத்தனை பேரிடமும் சீற்றம் கொண்டான்.
தம்பியர் கூறிய அறிவுரையைச் சினத்தோடு மறுத்தான். விளைவு?
இலங்கை அழிந்தது.
அரக்கர் குலம் அழிந்தது.
ராவணன் தான் அழிந்தான்.
தன் சுற்றம் முழுதும் அழியக் காரணம் ஆகிவிட்டான்.
இவ்வாறு சினம் விளைவிக்கும் கேடுகளை வரலாற்றிலும், கதைகளிலும்
காணலாம். அதனால் தான் வள்ளுவர்,
”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் “ என்று பாடியுள்ளார்.
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment