வணக்கம்.
நான் கவிஞரானால் …என்ன செய்வேன்?
பாட்டுக்கொரு புலவன் பாரதி போலப் பாமழை பொழிவேன்.
புரட்சிக்குயில் பாரதிதாசனாய் புதுமைக் கவிதைகள் பல படைப்பேன்.
காசுக்குப் பாடும் கவிஞராய் மீசை முறுக்கும் பொய்க்கூட்டத்தில்
நான் சேரமாட்டேன்.
தேசத்தின் தேவையை எண்ணாமல் வேஷம் போடுவது வீண் வேலை அல்லவா!
பொய்யும், களவும், புனைசுருட்டும் மலிந்து கிடக்கும் இச்சமுதாயத்தில்
மெய்மை ஒளிவீச என் கவிதைகள் தூண்டுகோல்கள்.
உள்ளொன்றும் வெளியொன்றுமாய் பேசித் திரிந்து;
வீண் வார்த்தைக் கோபுரங்கள் கட்டி முடிக்கும் அரசியல்வாதிகளுக்கு;
என் கவிதைச் சொற்களே சரித்திரம் படைக்கும் சாட்டையடிகள்.
வெள்ளம் போல் பாய வேண்டிய செல்வம் பள்ளத்து நீர் போல் ஒதுங்கி நின்று;
ஒருவர்க்கே துணை செய்யும் அவலத்தை நம் நாட்டில் பரவலாகக் காண்கிறோம்.
என் கவிதைகள் அணையிட்டுத் தேக்கி வைத்த பொருளை;
அனைவர்க்கும் கிடைக்கச் செய்யும் திறவுகோல்கள்.
ஆற்றுப் பெருக்கின்றி அடிசுட்டு வறண்டாலும்;
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் வையைநதி;
அதுபோல் செல்வமும் வளமும் எனைச் சேர மறந்தாலும்;
மறுத்தாலும் உள்ளதைக் கொண்டு வாழ்ந்து;
உலகோர்க்கு நல்வழி காட்டுவேன்.
“நமக்குத் தொழில் கவிதை”
என்ற பாரதியின் பாரம்பரியத்தில் சேர்ந்துவிடத் துடிக்கும் நான்;
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்னும் கொள்கை உடையவன்.
காசுக்குப் பாடும் கவிஞனாகி; என் எழுத்தை விலைபேச மாட்டேன்.
உண்மை ஊற்றெடுக்கும் உள்ள எழுச்சியையே கவிதை ஆக்குவேன்.
உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கமளிக்கும் இதமான படைப்புகளாய்;
என் கவிதை பிறக்கும்.
என் கவிதை இந்த சமூகத்து இருட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
ஆனால் எந்த ஒரு பிஞ்சையும் இருட்டுக்கு இழுத்துச் செல்லாது.
என் எழுத்து விடியலைக் காணத் துடிக்கும் பூமனங்களுக்குப்
பூபாள ராகம் இசைக்கும்.
ஆனால் எந்த ஒரு அந்திச் சாயலுக்கும் அடி பணியாது.
என் சொற்கள் கதிரவன் ஒளியாய்க் கலக்கம் நீக்கும்.
அன்றியும் காற்றோடு கரைந்து போய் சமுதாயத்தையே கறைப் படுத்தாது.
என் பணிக்கு வேலைநிறுத்தம் இல்லை.
என் பயணத்தில் மாணவருக்கும், ஆசிரியருக்கும் சமமாகவே இடம் கொடுப்பேன்.
முதலாளியோ; தொழிலாளியோ இருவர்க்கும் செவி சாய்ப்பேன்.
ஆண்களோ; பெண்களோ அனைவரையும் சரிநிகர் சமானமாகவே எண்ணுவேன்.
கண்மூடிப் பழக்கங்கள்
பொருளற்ற சடங்குகள்
சக்கையான சம்பிரதாயங்கள்
ஊனமுற்ற கொள்கைகள்
ஊட்டமில்லா வழக்கங்கள்
அனைத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டுவேன்.
எளிய சொல், எளிய சந்தம், எளிய நடை முதலியவற்றால்
எவர்க்கும் புரியும் வண்ணம் ஏற்றம் மிகு கருத்துகளைப் பாடுவேன்.
’என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்னும் லட்சியத்துடன் செயல்படுவேன்.
நன்றி.
வணக்கம்
No comments:
Post a Comment