Monday, November 23, 2020

நான் விரும்பும் பறவை- பள்ளிச் சிறார்க்கு உரிய மேடைப்பேச்சு (காகம்)

 அன்பு ஆசிரியர்களே; அருமைச் சகோதர சகோதரிகளே; வணக்கம்

சிறகடித்துப் பறக்கும் சிந்தனைப் பறவையைத் தட்டிவிட்டுக் கொண்டு
உங்கள்  முன் நான் விரும்பும் பறவையைப் பற்றிப் பேச முனைகிறேன்.  
காலை எழுந்தவுடன் கண்ணில் படுவது; 
கரைந்துண்ணும் பழக்கமுடையது;
கருமை நிறத்திற்கே சிறப்பைக் கொடுப்பது ……….காகம் 
பிறந்த குழந்தை தளர்நடையுடன் மழலை பயிலும்போதே;
தாய்மார் காட்டும் முதல் பறவை என்ற தகுதியைப் பெறுவது காகம்.
பாட்டுச்சொல்லிப் பிள்ளையைப் பேசப் பழக்கும் தாய்,
”காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா” என்றே முதலில் தொடங்குகிறாள்.
“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று;
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாட்டில் இடம்பெறும் பெருமை பெற்றது காகம்.
வயிற்றுக்குச் சோறிடும் முன்னர்;
அன்னை காக்கைக்குச் சோறிட்டு அந்தப் பறவையையே பெருமைப்படுத்துகிறாள்.
விருந்து வரும் திருநாளைக்  கரைந்து அறிவிக்கும் காகம் என்பது நம்பிக்கை.
இரவு தூங்கும் முன்னர் அம்மா சொல்லும் பல கதைகளில்
காக்கைக்குச் சிறப்பிடம் உண்டு.
பாட்டி வடை சுட்ட கதையில் காக்கைக்குப் பேரிடம் உண்டு.
தாகம் மிகுந்த காக்கை ஆற்றங்கரைப் பானையில் கல்லெடுத்துப் போட்டு
நீர் குடிப்பது அதன் மதிநுட்பத்தைக் காட்டுகிறது. 
தன் முட்டைகளைக் காக்க ராணியின் நகையை எடுத்து;
பாம்புப் புற்றில் போடும் காக்கையின் மதிநுட்பம் சொல்லில் அடங்காது.
புராணங்களில் மட்டும் காக்கைக்கு இடமில்லையா? என்ன!
பொங்குசனி என்றும்; மங்குசனி என்றும்;
பெயர்பெறும் சனீஸ்வரனின் வாகனமே காகம் தான். 
கோயில்களில் நவக்கிரகங்களுக்கு முன்னர்;
பலியினை ஏற்கச் சித்தமாக இருப்பது காகம்.
சனிக்கிழமைகளில் பக்தர்கள் எரிக்கும் எள்ளையும், எண்ணெயையும்
தலைநிமிர்ந்து எதிர்நோக்கும் காகத்தின் பெருமை இத்துடன் முடிகிறதா? இல்லை. 
அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியைக் கவிழ்த்தி;
நாட்டு மக்களுக்கு நன்மை செய்தது காகம்.
ஆம்; பிள்ளையார் காக்கை உருவத்தில் வந்து தான் உலக ஊழியம் செய்தாராம் 
இந்தச் சமுதாயத்தின் பொறுப்புணர்வுள்ள மக்கள்;
காரியங்களைச் சாதிக்க வளைந்து கொடுத்தால்;
பொதுமக்கள் கொடுக்கும் பட்டம் ‘காக்கா பிடிக்கிறான் ‘ என்பதாகும்.
‘காக்கை கரைந்து உண்ணும்‘ என்பது மூத்தோர் சொன்ன மொழி;
அதாவது தன்  இனத்தை அழைத்துப் பகிர்ந்துண்ணும் என்பதாம்.
காக்கா கா……கா…….கா…..ன்னு கத்துவதால் காக்கா என்று பெயர் பெற்றதா?
அல்லது காக்கா னு பெயர் வைத்ததால் கா…...கா………..கா…….னு கத்துகிறதா?
என்று சொல்விளையாட்டு விளையாடிப் பாருங்கள் .
இப்படியே பேசினால் காக்கையின் பெருமை சொல்லிமுடியாது.
எளிமை உடையது;
ஏற்றம் உடையது;
பாடம் சொல்வது;
பகிர்ந்து உண்பது காகம்
என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.
                                                                        நன்றி
                                                                    வணக்கம்.

No comments:

Post a Comment